
போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும் ஒரு கவிதையைப் போலப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும்.
தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலையை, எவ்வித அரசியல் முழக்கமுமின்றி முதன்மைக் கதாபாத்திரமான அந்தோணியின் தனிமை வழியாகவே படம் கடத்துவிடுகிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஆண்டுதோறும் உழைத்துச் சேர்த்து வைத்துவிட்டு, தாயகம் திரும்பி, சேமிப்பைச் செலவழித்து ஒருநாள் கொண்டாடும் அந்த ‘புதுப்பித்தல்’உணர்வு, ஒரு காட்சியில் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “அங்கே இருக்கிற மிச்சக் காலத்தைத் தாங்கிப் பிடிப்பது இந்த ஒரு நாள் மகிழ்ச்சிதான்” என்கிற வசனம், லட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் ஆன்மாவைத் தொடும் . இதைப் போல தமிழ்நாட்டின் நளினியாகப் பிறந்து ஈழத்தின் தொப்புள்கொடி உறவாக மாறிவிடும் டி.ஜே. பானு. “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு” என்கிற வசனம் வழியாகப் போருக்குப் பிறகு ஒரு தமிழ்ப் பெண்ணின் பாதுகாப்பின்மையையும் நிதர்சனங்களையும் மறைமுகமாகப் பேசும் இப்படத்தின் கதை.

இசைஞானி இளையராஜா வழங்கியிருக்கும் ஓர் இசைப் பொக்கிஷம் இந்தப் படம். ‘குத்து விளக்கொளியே’, ‘மொட்டு விட்ட புது மலரே’ போன்ற பாடல்கள் உறவுகளின் உன்னதத்தைப் பேசுகின்றன. வசனங்கள் மௌனமாகும் இடங்களிலும் காட்சி மொழியில் விரியும் நிலப்பரப்பு கடல் பரப்பு இரண்டிலும் இழையோடும் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களை இளையராஜாவின் இசை ஆழ்ந்து பேசுகிறது. அந்தோணியின் தனிமை, அவனது எதிர்பாராமை, கடலின் பிரம்மாண்டம் என அனைத்தையும் தன் இசையால் ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறார் இசைஞானி இளையராஜா.
ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம், இலங்கை நிலப்பரப்பின் அழகையும் கடலின் ஆழத்தையும் ஒரு தாயின் அக்கறையோடு படமாக்கியிருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் முதல் எளிய தெருக்கள் வரை ஈழத்தின் அசல் நிறத்தைத் திரையில் பார்க்கும் போது, ஒருமுறை அந்த மண்ணிற்குச் சென்று வரத் தூண்டுகிறது.
அன்பையும் அரவணைப்பையும் ஏக்கத்தையும் முன்வைக்கும் இந்தப் படம், ஈழ வெகுஜன சினிமாவுக்கு ஓர் அணிகலன்.
‘அந்தோணி’ – ஒரு பெரும் போருக்குப் பின் எஞ்சியிருக்கும் மனிதர்களின் ஏக்கத்தைப் பேசும் தரமான படைப்பு.




