அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசியதாவது;

கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளை நாம் கட்டுப்படுத்த முடியாது.
கனடா மீது அமெரிக்க விதித்துள்ள வரிகளின் எதிரொலியாக இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந் நிலையில் வரி விதிப்பு தொடர்பாக கனடா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், வரிவிதிப்புகள் வர்த்தகப்போர்களை உருவாக்கலாம் என்று பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அமெரிக்க அதிபர் டிரம்பை கோபப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தி விட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறி உள்ளதாவது;
கனடா ஒரு மோசடியான விளம்பரத்தை பயன்படுத்தி இருப்பதாக ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த வீடியோ போலியானது. அதில் வரிகள் பற்றி ரீகன் எதிர்மறையாக பேசுகிறார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு வரிகள் மிகவும் முக்கியம். கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இதன் மூலம் நிறுத்தப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில் கனடா பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




