டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது கனடா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.

“விஸ்கி போர்” என்றால் என்ன?
கனடாவின் எல்ஸ்மியர் தீவுக்கும், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்திற்கும் இடையே அமைந்துள்ள ஹான்ஸ் தீவு (Hans Island) என்ற சிறிய பாறைத் தீவுதான் இந்தச் சுவாரஸ்யமான மோதலுக்குக் காரணமாக இருந்தது. வெறும் 1.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் கனிம வளங்கள் எதுவும் இல்லை; யாரும் வசிக்கவில்லை.
1973-ஆம் ஆண்டு இரு நாடுகளும் கடல் எல்லை ஒப்பந்தம் செய்தபோது, இந்தத் தீவு இரண்டு நாடுகளுக்கும் சமமான தொலைவில் இருந்ததால், அதன் உரிமையைத் தீர்மானிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
1984-ஆம் ஆண்டு கனடா நாட்டு ராணுவத்தினர் அந்தத் தீவுக்குச் சென்று தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றி, அங்கு ஒரு பாட்டில் கனடா விஸ்கியை வைத்துவிட்டு வந்தனர். இதுவே பல தசாப்தங்களாக நீடித்த அந்த அமைதியான போரின் தொடக்கமாக அமைந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, டென்மார்க் நாட்டின் அமைச்சர் அந்தத் தீவிற்குச் சென்று கனடா கொடியை அகற்றிவிட்டுத் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினார். அத்துடன் அங்கு ஒரு பாட்டில் டென்மார்க் விஸ்கி மதுவை வைத்துவிட்டு, “டென்மார்க் தீவிற்கு உங்களை வரவேற்கிறோம்” என்ற ஒரு குறிப்பையும் விட்டுச் சென்றார்.
அதன் பிறகு சுமார் 38 ஆண்டுகள் வரை, இரு நாட்டு அதிகாரிகளும் அந்தத் தீவிற்கு மாறி மாறிச் செல்வதும், மற்ற நாட்டின் மது பாட்டில்களை அகற்றிவிட்டுத் தங்கள் நாட்டு மதுவையும் கொடியையும் வைப்பதையும் ஒரு சடங்காகவே செய்து வந்தனர். இதன் காரணமாகவே இந்த எல்லைப் பிரச்சினை “விஸ்கி போர்” என்று பரவலாக அழைக்கப்பட்டது.
49 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினை, 2022-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகி, ஹான்ஸ் தீவு 60-40 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டது. டென்மார்க்கிற்கு பெரிய பங்கு கிடைத்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவானது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடா தனது பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் “Associate Member” (இணை உறுப்பினர்) அந்தஸ்துக்குக் கொண்டுவருவது தொடர்பில் பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி வருவதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையான உறுப்பினராக இணைவது குறித்து கனடா தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக, வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஐரோப்பாவுடன் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே நோக்கமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, இந்த ஆண்டில் கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கொள்முதல் முயற்சியான SAFE-இல் இணைந்த முதல் ஐரோப்பிய அல்லாத நாடாகவும் மாறியுள்ளது.
ஒரு சிறிய பாறைத் தீவுக்காகத் தொடங்கப்பட்ட “விஸ்கி போர்”, இன்று கனடாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவின் அடித்தளமாக மாறியுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் தொடர்ந்து நீடித்தால், கனடாவின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரக் கொள்கையில் ஐரோப்பாவை நோக்கிய இந்த நகர்வு மேலும் முக்கியத்துவம் பெறும் என சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




