பேரணிக்காக கொடுத்த ஹெல்மேட்டை திருப்பி கொடுக்காமல் போலீசாரே எடுத்துச் சென்ற சம்பவம்தான் டாக் ஆப் டவுனாக மாறியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டார போலீசார் மற்றும் தனியார் இரு சக்கர விற்பனை நிறுவனம் சார்பில் காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
டிஐஜி லலிதா லெட்சுமி தொடங்கி வைத்தார். பேரணி திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் மில், பெல் கணேசபுரம் வழியாக மீண்டும் மஞ்ச திடல் பாலத்தை வந்தடைந்தது.
இந்த பேரணியில் காவல் துறை மற்றும் தனியார் இரு சக்கர விற்பனை மைய ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்க வந்த 8 போலீசாரிடம் ஹெல்மெட் இல்லை. இதனால் அந்த 8 போலீசாருக்கும் தனியார் நிறுவனம் ஹெல்மெட்டுகளை இரவலாக தந்து பேரணி முடிந்து தருமாறு கேட்டுக் கொண்டது.
ஆனால் பேரணி முடிந்த பின் அந்த 8 போலீசாரும் ஹெல்மெட்டுகளை திரும்ப கொடுக்காமல் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து மைக்கில் அறிவிக்கப்பட்டும் யாரும் ஹெல்மெட்டுகளை திரும்ப தரவில்லை. ஒரு ஹெல்மெட் விலை ரூ.600 என்றும் 8 ஹெல்மெட்டுகள் போய் விட்டதால் அதற்குரிய தொகை ரூ.4800 ஐ தனது சம்பளத்தில் நிறுவனம் பிடித்துக் கொள்ளும் என்று அந்நிறுவன ஊழியர் வேதனை தெரிவித்தார்.
போலீசாரே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது என்று அந்த ஊழியர் புலம்பி தள்ளி விட்டார்