காலச் சுவடுகள்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் நினைவு தினம் பிப்.9- 1977

ஜி.ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940- 1950-களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். ஜி.ஜி. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர்.

பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரில் 1901-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர். தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ்பெற்றார். 1948-ம் ஆண்டில் அரச வழக்கறிஞர் என்னும் தகுதியைப் பெற்றார்.

இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவர் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1931-ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கான தேர்தலில் மன்னார்- முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934-ம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினர் ஆனார். 1936-ம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947-ம் ஆண்டுவரை அரசாங்கச் சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.

1944, ஆகஸ்ட் 29-ல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக்காலகட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச்சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947-ல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத்தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.

1948-ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் குடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட பரந்தன் ரசாயனத் தொழிற்சாலை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலை ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.

தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிட தமிழ்த் தேசியவாத கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக்கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வேறுபாடு குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956-ம் ஆண்டுப் பொதுத்தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இததேர்தலில் இக்கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

1960-ம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார்.

1965-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் வெற்றி பெற்றனர்.

1970-ம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத்தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.

1970-ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970-ல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு தமிழருக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி.ஜி பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியலில் இவர் நேரடியாக இறங்கவில்லை.

தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்கேற்று வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவவழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.

இவ்வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் காலமானார்.

அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.

Recent posts

மோன்டால்சினி

💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்....
Thamil Paarvai

விளாதிமிர் லெனின்

👉 ‘லெனின்” என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில்...
Thamil Paarvai

சரோஜினி நாயுடு இன்று இவரின் நினைவு தினம்.

இந்தியாவின் ‘கவிக்குயில்” என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதில்...
Thamil Paarvai

குன்னக்குடி வைத்தியநாதன்.

பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள். வயலின்...
Thamil Paarvai

எம்.கே.தியாகராஜ பாகவதர்.

🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்....
Thamil Paarvai

ஏ.என்.சிவராமன்.

📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார். 📰 இவர்...
Thamil Paarvai

இராஜேந்திர பிரசாத் இன்று இவரின் நினைவு தினம்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற...
Thamil Paarvai

தி. ஜானகிராமன்

நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார். இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப்...
Thamil Paarvai

தேசிய அறிவியல் தினம்

தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு...
Thamil Paarvai

Leave a Comment