பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி கனடாவை அதிரவைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.
கனடாவிலுள்ள பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் பயின்ற உண்டுறை பள்ளிகளில், 1870களுக்கும் 1990களுக்கும் இடையில், 150,000 கனேடிய பூர்வக்குடியின, Métis மற்றும் Inuit என்னும் பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்ட நிலையில், அவர்களில், குறைந்தது 4,100 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளர்கள், அதாவது 50 மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 6,000க்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற பகுதியில் அமைந்துள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் ராடார்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு 215 சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கனடாவே அதிர்ந்தது.
அடுத்து, ஆல்பர்ட்டாவில் உள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் குறைந்தது 821 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகவே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
ஒரு தந்தையாக, என்னிடமிருந்து என் குழந்தைகள் பறிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்று கூறியுள்ள ட்ரூடோ, ஒரு பிரதமராக பூர்வக்குடியின குழந்தைகளை தங்கள் சமுதாயத்திலிருந்து திருடிக்கொண்ட இந்த வெட்கத்துக்குரிய கொள்கை என்னை அருவருப்படையச் செய்கிறது என்றார்.
தங்கள் பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடியாத சமுதாயத்தினரை எண்ணிப்பாருங்கள். அவர்களது நம்பிக்கைகள், கனவுகள், திறன், அவர்கள் என்னவெல்லாம் சாதித்திருப்பார்கள். அவர்கள் என்னவாகவெல்லாம் ஆகியிருப்பார்கள். அவை எல்லாம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதே என்று கூறியுள்ளார் அவர்.