வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிக்குட்டிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்கிறார். தன்னால் முடிந்த வரை, தேவை அறிந்து உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காலை சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்தார்.
பூங்காவை சுற்றி பார்த்த அவர், அங்குள்ள இரண்டு புலிக்குட்டிகளை தத்தெடுத்துக்கொண்டார். ஆர்த்தி, ஆதித்யா என்ற அந்த இரண்டு புலிக்குட்டிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தேவையான பரிமாரிப்பு செலவாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அவர் பூங்கா நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “விலங்குகள் மிகவும் வெகுளியானவை. அதனால் தான் அவைகள் மீது எனக்கு எப்போதும் அக்கறை உண்டு. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க முடியும் என சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்தது.
பிரபலங்கள் விலங்குகளை தத்தெடுத்தால், அது பற்றி நிறைய பேருக்கு தெரியவரும். மேலும் பலர் விலங்குகளை தத்தெடுப்பர் என நிர்வாகிகள் என்னிடம் கூறினார். அதனால் தான் இன்று இரண்டு வங்கப் புலிகளை தத்தெடுத்திருக்கிறேன். அவைகளுக்கு ஆறு மாதத்துக்கான பராமரிப்பு செலவாக ரூ.5 லட்சத்தை நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளேன்”, என அவர் கூறினார். விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, படப்பிடிப்புக்காக காரில் செல்லும் போது, தேனி மாவட்டத்தில் மலைகள் உடைக்கப்படுவதைக் கண்டு ஆதங்கப்பட்ட விஜய் சேதுபதி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
வைரலாகியுள்ள அந்த வீடியோவில் அவர், ‘மலைகள் உடைக்கப்படுவதை கண்டு, அழுகையே வந்து விட்டது. தயவு செய்து, முதல்வர் தலையிட்டு, உடனடியாக, இந்த செயலை நிறுத்த வேண்டும். மலையை உடைப்பதையும், திருடுவதையும் தடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இயற்கை மீது விஜய் சேதுபதிக்கு உள்ள அக்கறையை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.