பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பார்சிலோனா அணியின் கேம்ப் நோ சொந்த மைதானத்தில் நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜுவென்டஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.
அடுத்து 20வது நிமிடத்தில் மெக்கென்னி அபாரமாக பீல்டு கோல் அடிக்க 2-0 என முன்னிலை அதிகரித்தது.

பதில் கோல் அடிக்க மெஸ்ஸி உள்ளிட்ட பார்சிலோனா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும், ஜுவென்டஸ் தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் பலன் கிடைக்கவில்லை. 52வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரொனால்டோ மீண்டும் கோல் அடித்து அசத்த, ஜுவென்டஸ் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரொனால்டோ அடித்த 134வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூரில் தங்கள் அணி தோல்வியைத் தழுவியதால் பார்சிலோனா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். ஜி பிரிவில் தலா 6 ஆட்டங்களில் விளையாடிய இரு அணிகளும் 15 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் ஜுவென்டஸ் முதலிடம் பிடித்தது. டைனமோ (4), பெரன்க்வரோசி (1) அடுத்த இடங்களைப் பிடித்தன.