எம்.ஜி.ஆர்., மூலமாக சினிமா துறைக்குள் வந்தவர் இயக்குநர் மகேந்திரன். திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக திரைப்பயணத்தை தொடங்கி, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.
தமிழ் சினிமாவின் தனித்த இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன். உடல்நலக் குறைவால் இன்று(ஏப்.,2) காலை சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பிரபலங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்தனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, பாக்யராஜ், சுஹாசினி, மணிரத்னம், ராதிகா சரத்குமார், ரேவதி, தலைவாசல் விஜய், கருணாகரன், வரலட்சுமி, சந்தானபாரதி, திரு, தனஞ்செயன், உதயநிதி ஸ்டாலின், சின்னி ஜெயந்த், மோகன், அர்ச்சனா, சசிகுமார், பாக்யராஜ், யார் கண்ணன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, ஷங்கர், சோனா, தயா அழகிரி, பாலாஜி தரணிதரன், வெற்றிமாறன், அமீர், விஜய் சேதுபதி, பிசி ஸ்ரீராம், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், கார்த்திக் சுப்பராஜ், விக்ரமன், ரமேஷ் கண்ணா, எஸ்.பி.முத்துராமன், பாலா, எஸ்.ஆர்.பிரபு, அகத்தியன், சிம்புத்தேவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி நேரில் சென்று செலுத்தினர்.
தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி
தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் மிகவும் போற்றுதலுக்குரிய இயக்குனர் .மகேந்திரன். அவருடைய படைப்புகளான முள்ளும் மலரும், மெட்டி, போன்ற திரைப்படங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும், ஆழமான கதையம்சம் கொண்டதாகவும், காட்சியமைப்புகள் மிகவும் அழகாகவும் இருக்கும். அதனால்தான் இன்றளவும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக உதிரிப்பூக்கள் திரைப்படம் அன்றைய காலகட்டம் அல்லது இன்றைய தலைமுறைகளிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் சினிமா எடுக்க வரும் இயக்குனர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாய் இருக்கும். தனது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், அது மட்டுமின்றி, சமீப இயக்குனர் அல்லாது நடிப்பிலும் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சினிமா எனும் தோட்டத்தில் உதிர்ந்த பூ. அதே சமயம் மக்களின் மனதிலும் சினிமா கலைஞர்கள் மனதிலும் என்றுமே உதிராமல் இருக்கும் பூ. மகேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த திரையுலகின் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.