
உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் படத்தைப் போல இந்த படத்திலும் திருச்சிற்றம்பலம் தனுஷ் மற்றும் அவரது அப்பா பிரகாஷ் ராஜ் பேசிக் கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணமும் அம்மாவின் இழப்பு தான். தாத்தா பாரதிராஜாவின் திருச்சிற்றம்பலம் பெயரையே பேரன் தனுஷுக்கு வைக்கின்றனர். தனுஷின் நண்பர்கள் பழம் பழம் என அவரை கிண்டல் செய்கின்றனர்.
தாத்தா பாரதிராஜா, மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் ஒரே வீட்டில் வசித்தாலும் அப்பா மகனான பிரகாஷ்ராஜும், தனுஷும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு விபத்தில் தனுஷின் அம்மாவும், தங்கையும் இறந்து போனதே அதற்குக் காரணம். தனுஷும், கீழ் பிளாட்டில் வசிக்கும் நித்யா மேனனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். தனுஷுக்கு ஹை பை பெண்ணான ராஷி கண்ணா மீது காதல், ஓரிரு நாளில் அது நிறைவோமலே போகிறது. அடுத்து கிராமத்துப் பெண்ணான பிரியா பவானி சங்கர் மீது காதல், அது ஒரே நாளிலேயே ‘கட்’ ஆகிவிடுகிறது. நித்யா மேனன்தான் உனக்கு பொருத்தமான ஜோடி என தாத்தா பாரதிராஜா சொல்ல அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

யாரடி நீ மோகினி படத்தை போல முதல் பாதி சிட்டி, இரண்டாம் பாதியில் கொஞ்சம் நேரம் கிராமத்துக்கு கதை பயணிக்கிறது. உத்தமப்புத்திரன் உள்ளிட்ட படங்களில் காமெடி மித்ரன் ஜவகருக்கு எந்தளவுக்கு கை கொடுத்ததோ அந்த அளவுக்கு இந்த படத்திலும் காமெடி கை கொடுத்திருக்கிறது. சோபனா மற்றும் திரு செய்யும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கவிதை காமெடியில் பாரதிராஜா கலக்கல்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் எடுத்த தனுஷ் ஸ்விக்கி, ஜோமேட்டோ போல DOINK எனும் உணவு டெலிவரி பாயாக வேலை செய்வதை பார்த்து அவரது நண்பர்கள் கிண்டல் செய்ய அவர்களுடன் சண்டைப் போடும் காட்சியாக இருக்கட்டும், ராஷி கன்னாவை கரெக்ட் செய்ய கவிதை எழுதிக் கொண்டு நித்யா மேனனிடம் படிக்கும் காட்சியாகட்டும் தனுஷை விட அந்த இடங்களில் நித்யா மேனன் நடிப்பு பிரமாதம்.
இடைவேளைக்கு பிறகு அப்பா பிரகாஷ் ராஜ் அவனுக்கு என்னத்தான் வேணுமான்னு கேட்க, அம்மாவையும் தங்கச்சியும் திருப்பிக் கொடுன்னு பேசும் இடங்களாகட்டும், “ஊர் பூரா தேடாதே.. கூட இருகிறவள பாரு என்று” பாரதிராஜா நித்யா மேனனை பற்றி பேசும் இடமாகட்டும் சென்டிமென்ட் நல்லாவே செட் ஆகுது. தாத்தா நல்லா இருக்க, போலீஸ் அதிகாரியான அப்பாவுக்கு திடீரென ஸ்ட்ரோக் வருவது திணிக்கப்பட்டதை போல உள்ளது. நித்யா மேனனின் தம்பியாக நடித்துள்ள விஜே பப்புவின் சென்டிமென்ட் காட்சியும் ரசிகர்களை நெகிழச் செய்கிறது.

நடிகர்கள் தேர்வு புதிய படத்தை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. அனிருத்தின் இசை இளையாராஜா டச்சை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் மேகம் கருக்காதா பாடலில் லாலா லேண்டுக்கே கொண்டு சென்ற உணர்வு சிறப்பு. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கு. பிரியா பவானி சங்கரின் அந்த கேமியோ ரோல் சூப்பர். தனுஷ், நித்யா மேனன் கெமிஸ்ட்ரி திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரிய பலம்.
பிரசாந்த் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும், தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி, கார்த்தியின் லேட்டஸ்ட் விருமன் என திருச்சிற்றம்பலம் படம் முழுவதும் புதுசா எதுவுமே இல்லாமல் அரைத்த மாவையே கொஞ்சம் காமெடி முந்திரி, திராட்சைகளை தூவி அரைத்திருப்பது தெளிவாக தெரிவது புதிய படத்தை பார்த்த ஃபீலை கொடுக்கவே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் சிரித்து மகிழலாம். திருச்சிற்றம்பலம் – பழைய கதை ஆனால் புதிய வடிவம்!