வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மித்ததாக காணப்பட்ட மரத்தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் இயந்திரசாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இத் தீ விபத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்தது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அதன் உரிமையாளர்கள் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த நகரசபையின் தீ அணைப்பு வாகனம் மற்றும் பொலிசாரின் தண்ணீர் பவுசர் என்பனவும், அப் பகுதி பொது மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. குறித்த மரத்தளபாட மற்றும் மர விற்பனை நிலையம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில் மரத்தளபாடங்கள், வெட்டுமரம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய இயந்திர சாதனங்கள் இருந்த நிலையிலேயே அவை எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கும் வியாபார நிலைய உரிமையாளர் அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டமையினால் வவுனியா – மன்னார் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. இருப்பினும் போக்குவரத்து பொலிசார் நிலமையை சீர் செய்தனர். குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.