‘ரபேல்’ போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, மத்திய அரசின் மீது, காங்., முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் குற்றஞ்சாட்டிஉள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கும், ரபேல் ரக போர் விமானங்கள் வாங்கு வதற்கு, 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதில் ஊழல் நடந்துள்ள தாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையிலும், ‘முறைகேடு ஏதும் நடக்கவில்லை’ எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த, இடைத்தரகரான சுஷேன் குப்தாவுக்கு, 4.32 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த நாட்டின் லஞ்ச தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ராகுல் கூறியுள்ளதாவது:கர்மா என்பது ஒருவரது செய்கைகளின் தொகுப்பு; அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ‘இடைத் தரகருக்கு பணம் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதனால், ரபேல் ஒப்பந்தம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.