ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவர் எம்.சரவணன். எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ஒரு சாலை விபத்தால் ஏற்படும் விபரீதங்களை அழுத்தமாக பதிவு செய்த படம். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது.
ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய இவன் வேறமாதிரி, வலியவன் படங்கள் வெற்றி பெறவில்லை. இவன் வேறமாதிரி படத்தை கன்னடத்தில் சக்கரவியூகா என்ற பெயரில் ரீமேக் செய்தார். புனித் ராஜ்குமார் நடித்த இந்தப் படம் அங்கு சுமாரான வரவேற்பையே பெற்றது.
இதற்கிடையில் சாலை விபத்தின் விபரீதங்களை படமாக எடுத்த சரவணன், சாலை விபத்தொன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவர், தற்போது பூரண நலம்பெற்று மீண்டு வந்திருக்கிறார்.
சிகிச்சையில் இருந்தபோது ஹீரோயின் சப்ஜெக்ட் கதை ஒன்றை எழுதி முடித்தார். தற்போது அந்த கதையை த்ரிஷாவிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார். விரைவில் தயாரிப்பாளர், மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க இருக்கிறார்.