பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ கட்சி வெளியிடப்பட்டது. அதில் நடிகரும், எம்பியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு அவர் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற பாட்னா சாகிப் தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கவில்லை.
அவருக்கு பதிலாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு தன்னுடைய டுவிட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ள ரவிசங்கர் பிரசாத், ‘நான் தேசிய அரசியலில் பெரும் கவனத்தைச் செலுத்தி வந்தாலும், பாட்னா எனும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பு ஏற்படுகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சத்ருகன் சின்ஹாவுக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு காரணம், அவர் தொடர்ந்து கட்சி மீதும், பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதும் அவ்வப்போது எதிர்ப்பு குரல் கொடுத்துவந்தார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கிய ‘நானும் காவலாளி’ என்ற இயக்கத்துக்கும், ரபேல் ஒப்பந்த முறைகேடுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதோடு சமீபத்தில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார் போன்ற பிரச்னைகளால், அவர் சீட் மறுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தும், இன்னும் சில தினங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக பீகார் செல்ல உள்ள நிலையில், அப்போது ராகுல் காந்தி முன்னிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சத்ருகன் சின்ஹா தனது மனைவி பூனம் சின்ஹாவை, லக்னோ மக்களவை தேர்தலில் களம் இறக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பூனம் சின்ஹா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லக்னோ தொகுதியில் பாஜ சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிடுவார் என்று சமாஜ்வாதி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக பாட்னா சாகிப் தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட சத்ருகன் சின்ஹா, கடந்த சில தினங்களுக்கு முன் அகிலேஷ் யாதவை சந்தித்து குறிப்பிடத்தக்கது.