வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய வங்கதேச அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளையும், பெர்குசன், மேட் ஹென்ரி தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். பின்னர் 233 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மார்ட்டின் குப்தில், நிக்கோலஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினர். அரைசதம் அடித்த நிக்கோலஸ் அணியின் ஸ்கோர் 103 ஆக இருந்த போது 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் குப்திலுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வெற்றி இலக்கை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய மார்ட்டின் குப்தில் 103 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் சதமடித்தார். இறுதியில் மார்ட்டின் குப்தில் 116 பந்துகளில் 117 ரன்களும், ராஸ் டெய்லர் 49 பந்தில் 45 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். 44.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 233 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதமடித்த மார்ட்டின் குப்தில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.