குழப்பும் பாதைகள் :

வழிப்போக்கன், மதுரைக்கு செல்லக்கூடிய மூன்று விதமான வழிகளைப் பற்றியும் உங்களிடம் கூறிவிட்டேன். இனி நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுத்து மதுரையை அடையப் போகின்றீர்கள்? என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த கோவலனும், கண்ணகியும் எந்த வழியில் செல்வது என்று குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் கவுந்தி அடிகள் மட்டும் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவுடன் இருந்தார். அவருடைய தெளிவு அவருடைய பதிலிலிருந்து வெளிப்பட்டது.
நீங்கள் கூறிய மூன்று வழி, வாழ்க்கையில் முன்னேறுவதற்காக இருக்கக்கூடிய மூன்று வழிகள் போல தோன்றுகின்றது. வாழ்க்கையில் விரைவாக முன்னேற கடுமையாக உழைக்கக்கூடிய வழி தான் வலது புற வழி.
இடது புற வழி என்பது மிகவும் தந்திரம் நிறைந்த வழியாகும். ஏனென்றால், அந்த வழியின் வழியாக பல விதமான சலுகைகள் கிடைக்கின்றது, உழைப்புகள் எதுவும் இல்லாமல். அது குறுக்கு வழி போல எமக்கு தோன்றுகின்றது. அது நியாயம் அற்ற வழி.
மூன்றாவது வழி என்பது மிகவும் நீண்ட வழி. ஆனால் நேரான வழி. இயற்கையாக ஏற்படக்கூடிய தடைகளையும், தடங்கல்களையும் சந்தித்து முன்னேறக்கூடிய வழி ஆகும்.
உழைப்பே இல்லாமல் குறுக்கு வழியில் சென்று முன்னேறக்கூடிய வழிகள் எதுவும் ஞானிகள் விரும்ப மாட்டார்கள். நெடும் தூர பயணம் கொண்ட அந்த வழியாக இந்த இளம் பெண்ணை என்னால் நீண்ட தூரத்திற்கு அழைத்துச் செல்ல இயலாது. வலது புறமாக இருக்கக்கூடிய வழி சற்றே கடினமாக இருந்தாலும் உழைப்புடன் கூடியதாகவும், நேர்மையாகவும் இருக்கக்கூடியது. இந்த வழி நாம் பயணம் மேற்கொள்ள உகந்த வழியாகும் என்று எண்ணினார் கவுந்தி அடிகளார்.
கவுந்தி அடிகள் வழிப்போக்கனை பார்த்து இங்கு புண்ணிய பொய்கையில் குளித்து புண்ணியம் தேட வேண்டும் என்ற அவசியம் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் புண்ணிய தீர்த்தத்தில் முழுகி ஐந்திரம் நூலை பெற தேவையும் இல்லை. ஏனென்றால் அருகன் அருளிய மெய்நூல் தம்மிடம் உள்ளது என்று கூறினார்.
வழியை தேர்வு செய்தல் :
பவ காரணியில் நீராடி முற்பிறவியின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் முற்பிறவியின் பலனை அறிந்து நடக்க, இருக்கின்ற பிறவியின் பலன்களை மாற்ற இயலாது அல்லவா! இட்டசித்தியில் நீராடி விரும்பியதை பெறக்கூடிய அவசியமும் இல்லை. ஏனென்றால் உண்மை வழியில் நின்று உயிர்களுக்கு உதவி செய்தால்தான் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கூறி இடது புற வழியை வேண்டாம் என்று நிராகரித்தார்.
அதுமட்டுமல்லாமல் இடைவழியில் எங்களால் நீண்ட தூரம் கொடி போன்று இருக்கக்கூடிய இந்தப் பெண்ணை நடக்க வைக்க இயலாது. அதனால் இடைவழியும் வேண்டாம் என்று நிராகரித்தார்.
ஒருவேளை வழிப்பாதை கடினமாக இருந்தாலும், நாங்கள் வலது புற பாதை வழியாகவே செல்கின்றோம். எங்கள் இடத்தில் இருந்த பாதை பற்றிய ஐயத்தை நீக்கியதற்கு மிகவும் நன்றி என்றும், நீங்கள் உங்கள் திருமாலை வழிபட செல்லுங்கள்! என்று தெளிவாக பதில் கூறினார் கவுந்தி அடிகளார்.
கவுந்தி அடிகள் கூறிய பதிலானது அங்கிருந்த மூவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், தெளிவுடன் தனக்கான பாதையை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினம் அல்லவா! அவ்வளவு கடினமான பாதையையும் மிகவும் எளிமையாக கடந்து செல்லலாம் என்றார். அம்மூவரும் அவருடைய பதிலில் இருந்து தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
நாம் என்னதான் தெளிவாகவும், நிதானமாகவும் செயல்பட்டாலும் குழப்பம் நேரிட வேண்டும் என்று இருந்தால், அந்த குழப்பம் நேரிட்டு தானே ஆக வேண்டும். இவ்வளவு தெளிவாக பாதையை தேர்ந்தெடுத்திருக்கும் இவர்களுக்கும் அடுத்தடுத்த குழப்பங்கள் காத்துக் கொண்டே இருக்கின்றன. ஏனென்றால், விதியின் கையில் நாம் அனைவரும் சிறு பொம்மை அல்லவா..
வழிப்போக்கனிடம், தாங்கள் எந்த வழியில் பயணம் மேற்கொள்ள போகிறோம் என்பதை தெளிவாக கூறிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்று தங்களது பயணத்தை தொடங்கினார்கள். பொழுதும் சாய, இருளும் மலர இதற்கு மேலும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று எண்ணியவர்கள், அன்று அவர்கள் வழிப்பாதையில் உள்ள ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். பின்பு மறுநாள் காலையில் காட்டின் வழியாக மூவரும் தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.
ஓய்வு எடுத்தல் :
மூவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டு மெல்ல நடந்து கொண்டே சென்றார்கள். சிறிது நேரத்தில் வழிப்போக்கன் கூறியவாறு மூன்று சாலைகள் பிரிகின்ற இடத்தை அடைந்தார்கள். நீண்ட பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று எண்ணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்கள்.
காட்டின் வழியாக வெயிலில் நீண்ட தூரம் நடந்து வந்ததினால் கோவலனுக்கு தண்ணீர் தாகம் அதிகமாக ஏற்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அருகில் ஏதேனும் ஓடை இருக்கின்றதா! என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று கோவலன் மட்டும் அவர்கள் இருவரிடத்தில் இருந்து தனித்து நடந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஓடையும் அவனுக்கு தெரியவில்லை. மூன்று சாலைகளில் இடை வழியில் சிறு தூரத்தில் ஒரு ஓடை ஒன்று அவனுக்கு தென்பட்டது.
கானுறை தெய்வம் தோன்றுதல் :
இடை வழியில் கானுறை தெய்வம் இருப்பது குறித்து வழிப்போக்கன் கூறியிருந்த செய்தி அவன் நினைவுக்கு வந்தாலும் பயணத்தினால் ஏற்பட்ட தாகம், அவனை ஓடையின் அருகே செல்ல உந்தியது. வேறு வழியும் இல்லாததால் அவனும் அந்த ஓடையை நோக்கி நடக்கத் துவங்கினான்.
கானுறை தெய்வம் என்பது வனத்தில் இருக்கக்கூடிய ஒரு காவல் தெய்வம் ஆகும். வனத்தில் யார் புதியவராக வருகின்றார்கள்? என்பதை கண்காணிக்கக்கூடிய தெய்வமாகவும் இருக்கும். வருகின்றவர்களில் தீயவர்கள் இருந்தால் அவர்களை இந்த வனத்தில் பயணம் மேற்கொள்ளாத விதத்தில் பற்பல தடைகளை உருவாக்கும்.
ஒருவேளை வந்திருக்கக் கூடியவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் தெய்வம் ஒன்று இருக்கின்றது என்பதை மட்டும் அவனுக்கு தெரியப்படுத்தும். பயணத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களையும், வெல்லக்கூடிய பலத்தையும் அவனுக்கு அளிக்கும்.
எதிர்பாராத வருகை :
கோவலன் தவறுகள் பல செய்திருந்தாலும் அவன் தீயவன் இல்லை என்பதை புரிந்து கொண்ட கானுறை தெய்வம், அவனுடைய பாதையில் சிறு தடங்கலை மட்டும் நான் ஏற்படுத்தி இருக்கின்றேன் என்பதை உணர்த்த வேண்டும் என்று எண்ணியது.
கானுறை தெய்வம், கோவலன் விருப்பம் கொண்ட மாதவி இடத்தில் இருந்த தோழியான வசந்தமாலையை போல உருவம் எடுத்தது.
கோவலன் ஓடையின் அருகே வருகின்ற பொழுது, அவனுக்கு எதிரில் இருந்த வசந்தமாலை நீர் நிறைந்த விழிகளுடன் மிகுந்த பதற்றத்துடன் அவன் கால்களில் விழ வந்தாள்.
வசந்தமாலையை சற்றும் எதிர்பார்க்காத கோவலன் என்ன செய்வது? என்று தெரியாமல் அங்கு நின்று கொண்டிருந்தான்.
வருத்தமும், விலகுதலும் :
வந்த வசந்தமாலை அவன் கால்களில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள். மாதவி என் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றாள். அவள் எழுதிய கடிதத்தில் இருக்கக்கூடிய அந்த செய்திகளை சரியான விதத்தில் நான் உங்களிடம் தெரியப்படுத்தாமல் தவறு செய்துவிட்டேன்! என்று என்னிடத்தில் மிகுந்த கோபம் கொண்டாள். அதனால் தான் நீங்கள் மாதவியை பார்க்க வரவில்லை என்று மனம் வருத்தம் அடைந்தவள், என்னை வருந்தும் அளவிலான வார்த்தைகளால் ஏசினாள்.
அறிவில் சிறந்தவர்களாக இருந்தாலும், அனுபவத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் கணிகை குல பெண்கள் என்றால் அனைவரும் ஒளியில் விலகி தான் செல்கின்றார்கள். ஆனால் இருளில் மட்டும் விரும்பி வருகின்றார்கள். அவளும் பெண் தானே.. அவளுக்கென்று ஒரு மனம் இருக்கின்றது என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
அவள் நல்லவளாக இருந்தாலும் இந்த சமூகம் அவளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஒரு பெண் என்ற அங்கீகாரம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் என்று எண்ணியவள் கணிகை குலமே மிகவும் இழிவானது என கணிகை குல வாழ்க்கையையே கைவிட்டாள்.
நீங்கள் மாதவியை காண வராததால் உங்களுக்கு பிடித்த சிகை அலங்காரங்கள் அனைத்தையும் வெறுத்து ஒதுக்கினாள். அவளிடத்தில் இருந்த அனைத்து முத்துமாலைகளையும் தூக்கி எறிந்தாள். அதோடு என்னையும் இனிமேல் என் முகத்தில் வந்து விழிக்காதே! என்று கூறிவிட்டு, என்னை விரட்டியும் விட்டுவிட்டாள். அதன் பின்பு நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? என்பதை அறிந்து கொண்டேன்.
அப்பொழுது மதுரை வழியாக வணிக கூட்டம் செல்வதை அறிந்து அவர்களோடு இணைந்து வந்து, இப்பொழுது நான் உங்களை அடைந்திருக்கின்றேன் என்று நீலி கண்ணீருடன் கூறினாள். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? இதில் என் தவறு என்ன இருக்கின்றது? நீங்கள் இருவரும் செய்த தவறுக்கு நான் ஏன் பலியானேன்? என்று புலம்பி நின்றாள் வசந்தமாலை உருவத்திலிருந்த கானுறை தெய்வம்.
மெய்யா.. பொய்யா..
கோவலன், வசந்தமாலை உருவத்திலிருந்த கானுறை தெய்வம் கூறிய கூற்றுகள் எதையும் நம்பவில்லை. ஏனென்றால், புகார் நகரத்திலிருந்து வருவதாக கூறியிருக்கின்றாள். ஆனால் நாம் வருகின்ற பாதையில் இவளை எங்கும் காணவில்லையே. அதுமட்டுமல்லாமல் இவள் எப்பொழுது வந்தாள். என்னை கடந்து செல்வதற்கு உண்டான வாய்ப்புகளும் இவளிடத்தில் இல்லை. அப்படி இருக்கின்ற பொழுது என்னிடத்தில் இப்போது பேசிக்கொண்டு இருப்பவள் உண்மையான வசந்தமாலை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொண்டான்.
அப்படியானால் இது யாராக இருக்கும்? என்று அவன் எண்ணத் துவங்கியதும், வழிப்போக்கன் கூறிய கூற்று அவன் நினைவுக்கு வந்தது. ஒருவேளை இது கானுறை தெய்வமாக இருக்குமோ? ஏனென்றால் பயணங்களை மேற்கொள்பவர்களை பயணம் மேற்கொள்ளாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவள் தானே. அப்படியானால் இப்பொழுது என் முன் இருப்பவள் கானுறை தெய்வமாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தான்.
கொற்றவை மந்திரம் :
பின்பு கோவலன் கொற்றவை மந்திரத்தை உச்சரிக்க தொடங்கினான். கொற்றவை மந்திரம் என்பது தூய்மையற்ற தேவதைகளை விரட்டும் தன்மை கொண்டதாகும். அந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கியதும் வசந்தமாலை ரூபத்தில் இருந்த கானுறை தெய்வம் அச்சம் கொண்டது. இருப்பினும் தனது நடிப்பினை மேற்கொண்டு அந்த மந்திரத்தை உச்சரிக்காமல் இருப்பதற்கான சூழலையும் உருவாக்க நினைத்தது.
நீங்களோ எதையும் கூறாமல் எதையோ சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்களே. இது தகுமா? என்னுடைய இந்த நிலைமைக்கு காரணமாக இருந்தீர்களே! இப்பொழுது என்ன செய்யப் போகின்றீர்கள்? எனக்கு உடனே பதில் கூறுங்கள்! என்று வசந்தமாலை கோபம் கலந்த குரலுடன் கேட்கத் தொடங்கினாள்.
ஆனால் கோவலனோ, அவளுடைய கூற்றுகள் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் கொற்றவை மந்திரத்தை கூறிக்கொண்டே இருந்தான்.
பொறுமை இழந்த வசந்தமாலை ரூபத்தில் இருந்த கானுறை தெய்வம் மந்திரம் கூறுவதை உடனே நிறுத்து! என்று கூறிக் கொண்டே தன்னுடைய சுய உருவத்திற்கு மாறியது.
தெளிவும், சஞ்சலமும் :
சுய உருவத்திற்கு மாறிய கானுறை தெய்வம் என்னுடைய மாய ரூபத்தினால் உன்னை மயக்கம் செய்யவே எண்ணினேன். ஆனால் என்னுடைய ரூபத்திற்கும், என்னுடைய மாயத்திற்கும் நீ மயங்கவே இல்லை. தெளிவுடன் தான் இருக்கின்றாய். என்னால் உனக்கு எந்த விதமான தீங்கும் நேரிட போவது கிடையாது. ஆகவே கொற்றவை மந்திரத்தை உச்சரிப்பதை நிறுத்திவிடு என்றது.
கோவலனும் கொற்றவை மந்திரத்தை உச்சரிப்பதை நிறுத்தினான்.
சுய உருவத்திற்கு மாறிய கானுறை தெய்வம், அவனிடத்தில் தான் செய்த செயலை யாரிடமும் உரைக்க வேண்டாம் என்று, குறிப்பாக உன்னுடைய மனைவியான கற்புக்கரசியாக இருக்கக்கூடிய கண்ணகியிடமோ, உங்களுடன் வந்திருக்கக்கூடிய துறவிகள் இடத்திலோ இங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றி எதையும் உரைக்க வேண்டாம். ஏனென்றால் கற்புக்கரசிகளின் சாபமும், துறவிகளின் சாபமும் எனக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்திவிடும். அதனால் இங்கு நிகழ்ந்தவை எதையும் அவர்களிடத்தில் கூற வேண்டாம் என்று கூறியது.




