அழியா செல்வம் :

கண்ணகியிடம் கோவலன் குறுகிய நேர மகிழ்ச்சிக்காக ஒழுக்கம் இல்லாத ஒருத்தியுடன் சேர்ந்து, எனது முன்னோர்கள் சேர்த்து வைத்த அனைத்து செல்வங்களையும் இழந்து விட்டு இன்று ஒன்றும் இல்லாதவனாக, அடுத்த பொழுது என்ன செய்வது? என்று தெரியாத ஒருவனாக உன் முன்னால் வந்திருக்கிறேன்.
உனது தேவைக்கு அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன்? என்று தெரியவில்லையே கண்ணகி என்று அந்த நொடியில் இருந்து அவளைப் பற்றி சிந்திக்க துவங்கினான். வேறு எதுவும் அவன் மனதில் இல்லை. அந்த வார்த்தைகளை அவன் உச்சரிக்கின்ற பொழுதெல்லாம் தான் செய்த தவறுகளாலும், இழந்தவைகளாலும் பெரும் அவமானத்தில் இருப்பது அவனிடத்தில் இருந்து வெளிப்பட்ட பேச்சுக்களில் தெளிவாக வெளிப்பட்டது.
கோவலன் மாதவியைப் பற்றி புரிந்து கொண்டு தான் இவ்விதம் கூறினார் என்பதை கண்ணகி தெளிவாக புரிந்து கொண்டாள். கோவலன் இடத்தில் கால் சிலம்புகளை கொடுக்க முன்வந்தது மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்குமோ? திருந்தி இப்பொழுது நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணியவருக்கு ஏமாற்றமாக அமைந்து விடுமோ? என்று ஒரு நொடியில் அவளுடைய மனம் பதற்றம் கொண்டது. அதை தவிர்க்க உடனே கோவலனின் பிடியிலிருந்து வெளிவந்த கண்ணகி எதற்காக உங்களிடத்தில் எதுவும் இல்லை என்று எண்ணுகின்றீர்கள்?
நான் தான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன். நம்மிடத்தில் என்னுடைய கால் சிலம்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது உங்களது தந்தையிடமிருந்து நீங்கள் கற்ற வணிக அறிவும் நிறைய இருக்கிறது. இது போதாதா? இதை வைத்து இழந்த அனைத்து செல்வங்களையும் உங்களால் மீட்க முடியாதா? அழியாத பல செல்வங்கள் உங்களிடத்தில் இருக்கின்ற பொழுது, அழிந்த செல்வங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகின்றீர்கள்? என்று கோவலனை தேற்றினாள் கண்ணகி.
புத்துணர்ச்சியான கோவலன் :
கண்ணகியின் கூற்றை கேட்ட கோவலன் புத்துணர்ச்சியுடன் ஆமாம்! கண்ணகி நீ கூறுவதும் சரி தான். நான் கற்ற வணிக அறிவை கொண்டும், உன்னுடைய சிலம்பை முதற் பொருளாக கொண்டும் நான் இழந்த அனைத்து செல்வங்களையும் மீட்டெடுப்பேன். அதுமட்டுமல்லாது நாம் இவ்வூரில் இனி இருக்க வேண்டாம். நாம் மதுரைக்கு செல்வோம். அங்கு சென்று புதிய வணிகத்தை தொடங்குவோம். இழந்த அனைத்தையும் மீட்டு மீண்டும் நம் ஊருக்கே திரும்பி வருவோம் என்றான்.
கண்ணகியும் தன் கணவர் கூற்றுக்கு இணங்கி அவருடைய மனதிற்கு ஏற்ப, அவளும் அவருடன் செல்வதற்கான பயணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.
கோவலன் நாம் காலத்தை விரயம் செய்ய வேண்டாம். நாம் இப்பொழுது பயணத்தை தொடங்குவோம் என்று கூறினான்.
கண்ணகிக்கு கோவலனின் இந்த திடீர் முடிவு வியப்பாக இருந்தாலும், பயணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்ய துவங்கினாள்.
கோவலனின் விதியே, அவனை இந்த திடீர் முடிவை எடுக்க வைத்தது. விதி வலிமை உடையதல்லவா! வலிமை படைத்தவனாக இருந்தாலும் விதியின் வலிமைக்கு ஈடாக மாட்டான்.
மாற்றம் தேடிய பாதை :
கதிரவன் வருவதற்கு முன்பாகவே விடியற்காலை பொழுதில் இருவரும் அனைவருக்கும் முன்பாக எழுந்து, அவர்கள் செல்ல வேண்டிய வழியை நோக்கி புறப்பட துவங்கினார்கள். விருப்பம் கொண்டு துவங்கினார்களோ? அல்லது விருப்பம் இன்மையில் துவங்கினார்களோ தெரியவில்லை? ஆனால் அவர்களின் பயணம் விதியின் காரணமாகத் தான் இயங்கி இருந்தது. அதனால் அவர்களுடைய வாழ்க்கையானது பெரும் மாற்றத்தை சந்திக்க போகிறது என்பது தெரியாமல், அவர்களும் செல்ல தயாரானார்கள்.
கோவலனும், கண்ணகியும் மதுரை நகரத்திற்கு செல்ல தயாரானார்கள். நீண்ட கதவினை உடைய மாளிகையின் பெருவாயிலை மூடினார்கள். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் அனைத்தும் பொலிவற்றது போல இருந்தது. அவர்கள் என்றும் கண்டுகளிக்க கூடிய நினைவில் இருந்து அகற்ற முடியாத பலவிதமான ஓவியங்கள் யாவும் இருளில் மூழ்கின.
வீட்டின் முற்றத்தில் ஆட்டுக்கிடாயும், கவரிமானும், அன்னப்பறவையும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடாமல் நட்புடன் பழகிக் கொண்டிருந்தன. அதை காண்பதற்கு இரு கண்கள் போதாது என்று பலமுறை அவற்றைப் பார்த்து மகிழ்ந்தவர்கள், அன்று அந்த காட்சியை கண்டு செல்ல முடியாமல் இறுக்கமான மனநிலையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். இருந்தாலும் திரும்பத் திரும்ப அவர்களும் அவைகளைப் பார்த்துவிட்டு சென்றனர்.
கோவலன் பிறந்த நகரம் புகார் நகரமாகும். இந்த நகரத்தில் பெரும் செல்வத்துடனும், செல்வாக்குடனும் வாழ்ந்தவன். பல குடும்பங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவன். ஆனால் இன்றோ ஒரு ஏழை வியாபாரியாக அவர்கள் முன்னிலையில்.. அவனால் அவ்விடத்தில் இருக்க முடியவில்லை. கணக்கு வழக்குகள் எதுவும் இல்லாமல், வாரி செலவு செய்தவன் இன்று எதுவும் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்தது. அதற்கான தீர்வு என்பது வேறு ஊர் தான் என்பதை முடிவு செய்தான். முடிவு செய்ய வைத்ததும் விதி தான்.
தளரும் நம்பிக்கை :
வீட்டின் முன் உள்ள நீண்ட நெடும் பாதையின் வழியே புகார் நகரத்தை கடந்து, ஊர் புறத்தை அடைந்தார்கள். அங்கே அவர்கள் திருமாலின் திருக்கோவிலை கடந்த வண்ணமாக அதன் வலது பக்கம் சென்றார்கள்.
கோவலன் கண்ணகியுடன் விடியற்காலையில் புறப்பட்டான். ஆனால் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவன் வருவான், வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதவிக்கு ஏமாற்றங்கள் தான் நிறைந்திருந்தது.
அவளை பொறுத்தவரையில் கோவலன் வருவான் என்ற நம்பிக்கையும் தளரத் துவங்கியது. அவளுடைய வாழ்க்கையில் இருந்த இன்பங்கள் அனைத்தும் மறைந்து சோகங்கள் உதிக்க துவங்கின. இருளானது அவளைப் பற்றத் துவங்கியது.
வியாபாரத்தில் நிறைய அனுபவமும், அறிவும் கொண்டிருந்தால் பொருள் ஈட்டி விடலாம் என்று நினைத்திருந்த கோவலனுக்கு, விதியோ! அவன் வழியில் வலைவிரித்து இருந்தது. விதியின் காரணமாக அந்த வலை தனக்குத்தான் விரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவன் அறியாமல் விட்டு விட்டான். வலையில் சிக்கியவன் மீளா முடியாதளவு சிக்கலில் அகப்படப் போகிறான். விதியானது தன்னுடைய தாண்டவ விளையாட்டை அவனுடைய பயணத்திலிருந்து துவங்கியது.
ஊரின் எல்லையில் இருந்து கோவிலை தாண்டிய பின்பு புகார் நகரமானது அவர்களை விட்டு மெல்ல மெல்ல மறைய துவங்கியது.
கோவலனும், கண்ணகியும் புகார் நகரத்தின் எல்லையை கடந்த பின்பு, அங்கு ஒரு பெரு வழியை அடைந்தார்கள்.
பயணம் ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நடந்து சென்றனர். அதற்குள்ளாகவே கண்ணகி மிகவும் சோர்வடைந்து விட்டாள். செல்வ செழிப்பில் வளர்ந்தவளாயிற்றல்லவா! கண்ணகி. எங்கு செல்வதாக இருந்தாலும் மாட்டு வண்டியில் சென்று பழகியவளுக்கு இந்த பயணம் மிகவும் களைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இன்னும் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டும்? எங்கே இருக்கிறது மதுரை? என்பது போல வியர்த்த வண்ணமாக கோவலனிடம் வினவினாள்.
கண்ணகியின் எண்ணத்தையும், அவளுடைய சூழ்நிலையையும் தெளிவாக புரிந்து கொண்ட கோவலன் அவளிடத்தில் இன்னும் கொஞ்ச தூரம் தான் செல்ல வேண்டும். என்ன ஒரு ஐந்து ஆறு காத தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறிய வண்ணமாக சிரித்துக் கொண்டே நடந்தான்.
என்ன இன்னும் ஐந்தாறு காத தூரம் நடந்து செல்ல வேண்டுமா? என்பது போல கண்ணகி கேட்டுக் கொண்டே கோவலனுடன் இணைந்தே நடந்து வந்தாள்.
ஆனால் கோவலன் சொன்ன பொருளோ வேறு. அதாவது ஐந்தாறு காதம் என்பது முப்பது காத தூரமாகும். இதை சொன்னால் கண்ணகி இன்னும் சோர்வடைந்து விடுவாள் என்று எண்ணியே மாறுபட்ட பொருளில் கூறினான்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே பெரு வழியின் வழியாக நடந்து வந்து, இலவந்திகை என்னும் சோலையின் வழியே காவிரி நதியின் வடக்கு பக்கம் உள்ள கவுந்தி அடிகள் தங்கி இருக்கக்கூடிய தவப்பள்ளியை அடைந்தனர்.
நாம் மதுரைக்கு அருகில் வந்து விட்டோம். அதற்கு முன்பாக கவுந்தி அடிகள் தங்கி இருக்கும் பள்ளிக்கு அருகில் இருக்கின்றோம். அவரிடம் சென்று ஆசியைப் பெற்று, அங்கு சிறிது நேரம் இளைப்பாரி விட்டு புறப்படலாமா? என்பது போல கோவலன் கேட்டான்.
கவுந்தி அடிகளின் தவப்பள்ளி :
கண்ணகியும் சரி என்று கூறினாள். அவர்கள் இருவரும் விரைவாக கவுந்தி அடிகள் தங்கி இருக்கக்கூடிய தவப்பள்ளியை அடைந்தார்கள்.
கவுந்தி அடிகள் ஒரு சமண துறவி ஆவார். அவருடைய தவப்பள்ளியில் கோவலனையும், கண்ணகியையும் கண்டு அவர்களை அன்போடு வரவேற்றார். பின்பு அவர்களை பார்த்த உடனே அவர்களுடைய பயணம் குறித்த காரணமும் அவருக்கு புரிந்தது.
தனது தவப்பள்ளிக்கு வந்திருந்த இருவரும் ஓய்வெடுக்க ஒரு அமைதியான இடத்தையும், அவரிடம் இருந்த உணவுகளில் கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்தும் இளைப்பாற வைத்தார்.
கேள்வியும், தடுமாற்றமும் :
கோவலனும், கண்ணகியும் ஒரு வழியாக கவுந்தி அடிகளின் தவப்பள்ளியை சென்றடைந்தனர். தனது தவப்பள்ளிக்கு வந்திருந்த இருவரும் ஓய்வெடுக்க ஒரு அமைதியான இடத்தையும், தன்னிடம் இருந்த உணவுகளில் கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்தும் இளைப்பாற வைத்தார்.
கோவலனிடம், தவறு செய்தவர்கள் தானே யாரும் அறியாத வண்ணமாக இருந்த ஊரை விட்டு வெளி ஊருக்கு செல்வார்கள். அவர்களிடத்தில் இருக்கக்கூடிய அவசரமும், வேகமும் உங்களிடத்தில் இருக்கின்றதே. இவ்வளவு வேகமாக வெளியேறி செல்வதற்கான காரணம் தான் என்ன? என்பது போல கவுந்தி அடிகள் வினவினார்.
அவர் எழுப்பிய கேள்வியில் அவர் நம்மை பற்றி அறிந்து கொண்டாரா? என்பது போல கோவலன் எண்ணினாலும், தான் யார்? என்பதும் எதற்காக இங்கு வந்திருக்கின்றோம்? என்ற கதை எல்லாம் அவரிடத்தில் கூறாமல், இப்பொழுது நான் எதையும் கூற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் என்று கூறிவிட்டு, நாங்கள் புது வாழ்வை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், பொருள் ஈட்டுவதற்காகவும் மதுரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறினான்.
ஓ ….அப்படியா…. நீங்கள் மதுரைக்கு செல்ல வேண்டும் என்றால் போகும் வழியில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அந்த காட்டின் வழியே உன்னுடைய துணைவியாரை பாதுகாத்து அழைத்துச் செல்வது என்பது மிகவும் கடினமாக இருக்குமே என்று சிரித்துக் கொண்டே கூறினார் அடிகளார்.
பயணம் என்றாலே கடினமாகத் தான் இருக்கும் என்று கூறிக்கொண்டே, நாங்கள் மதுரைக்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். அந்தப் பயணத்தில் நாங்கள் வெற்றியும் அடைவோம் என்று உறுதியுடன் கூறினான் கோவலன்.
இடைவிடாத தவத்தின் பயனாக மேன்மையான ஆன்ம சக்தியை பெற்றவர் கவுந்தி அடிகள். கோவலனை அப்பொழுது பார்த்த பொழுது அவன் வாழ்க்கையில் கடந்துவந்த பாதைகளை பற்றி அவர் தெளிவாக புரிந்து கொண்டார் அடிகளார்.
அவர்களுடைய மன உறுதியைக் கண்டு அவர்களுடைய பயணத்தை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முயலவில்லை. அவரவர் வாழ்க்கையை அவர் அவர்களே அனுபவிப்பது தான் சிறந்தது. மற்றவர்கள் அவர்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர் அல்லவா! அடிகளார்.




