இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா, சென்னை ஐஐடியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட இளையராஜா தான் பாடல்கள் உருவாக்கும் விதத்தை செய்து காட்டினார். ஐஐடி மாணவர்கள், இளையராஜாவின் பாடல்களை பாடினார்கள். பின்னர் இளையராஜா பேசியதாவது:
தமிழ் சினிமா இசை அமைப்பாளர்களில் நான் தான் அதிக பாடல்கள் பாடியிருக்கிறேன். அதிக பாடல்கள் எழுதியிருக்கிறேன். குறுகிய காலத்தில் அதிக படங்களுக்கு இசை அமைத்திருப்பதும் நான் தான். 1978ம் ஆண்டில் 56 வாரங்களில் 58 படங்களுக்கு நான் இசையமைத்தேன். ஒரு படத்திற்கு 3 நாட்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்ததில்லை. இசைகலைஞர்களால் உருவாக்கப்படும் இசைக்குதான் ஆற்றல் அதிகம் இருக்கிறது. கணினி உருவாக்கும் இசையில் உணர்ச்சி இருக்காது.
நீங்கள் சீ என்று துப்புகிற படத்தை நான் 5 முறை பார்க்கிறேன். ஆனால் நான் துப்ப மாட்டேன். காரணம் அந்த படத்தில் நான் இருக்கிறேன். அதற்கு வேலை செய்கிறேன். வளிமண்டலத்தில் நீர் காற்றுபோல இசையும் இருக்கிறது. அந்த அதிர்வலைகளை எனது மூளையால் தொட முடிந்தது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையையும் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும்.
இளைஞர்கள், மாணவர்கள் கனவு காண்பதை விட்டு விட்டு, செயலில் இறங்க வேண்டும். என்னை பற்றி சுயசரிதை எழுத இருக்கிறேன். விரைவில் அது வெளிவரும்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.