கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கபட்டுள்ளது.
இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் கல்வி ரீதியான தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாகாணத்தில் கல்வித்துறையில் பல்வேறு வகையான முன்னடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் வகையில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா தலைமையில் திருமலை உவர்மலை இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
வைபவத்தில் மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபயகுனவர்தன உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் கல்வித்திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.