
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு திருமணம் சாதகமாக அமையும்?… என்பதை காண்போம்.
ரிஷபம் :
திரிகோணத்தில் நிற்கும் கிரகம் நன்மை செய்யும் என்பதற்கிணங்க 9ல் நிற்கும் சனிபகவான் குடும்பஸ்தன் என்ற அந்தஸ்தை வழங்குவார். ஆகவே, இந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கைகூடும். பதவி உயர்வு மற்றும் புகழை வழங்கும் ஸ்தானத்தில் சனிபகவான் நிற்பதால் திருமண வைபவத்தை நடத்தி, குடும்பத்தலைவன் என்ற பதவி உயர்வை தருவார்.
கடகம் :
ராசிக்கு 7ம் வீட்டின் அதிபதியான சனிபகவான் 7ல் அமர்ந்து ஆட்சி பெறுவதினால் திருமண யோகத்தை அமைத்து தருவார்.
கன்னி :
ராசிக்கு 5ம் வீட்டின் அதிபதியான சனிபகவான் 5ல் அமர்ந்து ஆட்சி பெறுவதினால் திருமண யோகத்தையும் மற்றும் குடும்பத்தில் வாரிசுகளின் வருகையையும் ஏற்படுத்துவார்.
துலாம் :
ராசிக்கு 4ம் வீட்டின் அதிபதியான சனிபகவான் 4ல் அமர்ந்து ஆட்சி பெறுவதினால் குடும்ப பெரியோர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகன்று சுபிட்சம் உண்டாகும்.
தனுசு :
சனிபகவான் நிற்கும் இடத்தை சிறப்பிப்பார் என்பதற்கேற்ப ராசிக்கு 2ம் இடத்தில் நிற்பதால் புதிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே, இந்த அமைப்பால் திருமணயோகம் கைகூடும்.
மகரம் :
ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால், சொந்த வாழ்க்கையை அமைத்து தருவார். இதன் காரணமாக திருமண பாக்கியம் அமையும்.
கும்பம் :
ராசிக்கு 12ல் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் சுப விரயங்களை ஏற்படுத்துவார். மேலும், போக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12ம் பாவத்தில் நிற்பதால் திருமண பாக்கியம் கைகூடும். திருமணம், வீடுகட்டுதல், வீடு பராமரித்தல் போன்ற சுப விரயங்களை செய்வதால் பிற வீண் விரயங்களை தடுக்கலாம்.
மீனம் :
ராசிக்கு 11ம் இடத்தில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால், திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இந்த காலக்கட்டங்களில் திருமணயோகம் கைகூடும். மேலும், மறுமணம் செய்ய நினைப்பவர்களுக்கு மறுமணம் நடைபெறும்.