
↱ நம்முடைய முன்னோர்கள் காலத்தில் கூட்டுக் குடும்பமுறை நம்மிடையே இருந்தது. முதியவர்களை கவனிப்பதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர். ஆனால் தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சியில் கூட்டுக்குடும்பம் என்பது மறைந்து விட்டது.
↱ நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கையானது அநாவசிய அழுத்தங்கள் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்கள் அற்று வாழும்போது நீண்ட ஆயுள் ஓர் ஆசீர்வாதமாக அமைகின்றது. இவ்வாறான நிலைமை எல்லோருக்கும் கைகூடுவதில்லை.
சவால்களில் தவிக்கும் முதியோர்கள்:
↱ இன்றைய சமுதாயத்தில் கூட்டு குடும்பங்கள் என்ற நிலை மாறி தனி குடும்பங்கள் அதிகம் வந்துவிட்டன. திருமணம் ஆன முதல் மாதத்திற்குள்ளே தனிகுடும்பம் சென்று விடுகின்றனர் இன்றைய தலைமுறையினர். இதனால் முதியோர்கள் வீட்டிலேயே தனிமையில் தள்ளும் நிலையோ அல்லது முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ நடக்கிறது. இது போன்ற நிகழ்வுகளால் முதியோரின் மனநலம் பெரிதும் பாதிக்கிறது.
↱ முதியோருக்கு வயதான காலத்தில் இயல்பான இயக்கம் குறைவதால், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போக முடிவதில்லை, ஞாபகம் குறைந்து விடுகிறது. அதனால் அவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாகின்றனர். சக மனிதர்களை சந்திப்பதும் குறைந்துவிடுகிறது. முழுக்க முழுக்க குடும்பத்தில் உள்ளவர்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அதை புரிந்துக்கொள்ளாமல் புறக்கணிப்பதால் தனிமை உணர்வுக்குத் தள்ளப்பட்டு உறவு சார்ந்த மன அழுத்தம் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.
↱ உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் இதுபோன்ற சவால்களில் தவிக்கும் முதியவர்களின் நிலையை வீட்டில் உள்ளவர்களும், இளைய தலைமுறையினரும் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப நடவடிக்கைகளிலும், திட்டமிடுதலிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். முதியோர்களை கவனிப்பதற்காகவே சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
இன்று அவர்கள், நாளை நீங்கள் …..

↱ நீங்கள் எப்படி உங்கள் பெற்றோரை கவனிக்கிறீர்களோ அதுபோலத்தான் நாளை உங்கள் குழந்தைகள் கவனிப்பார்கள். காரணம், பெற்றோரின் நடவடிக்கையைப் பார்த்துதான் பெரும்பாலும் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அன்பான வார்த்தைகளைப் பேசி அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளை அவர்களோடு பேச, விளையாட வைக்க வேண்டும். இது வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும்.
↱ அதேபோல முதியவர்களுக்கு ஏற்றது கூட்டுக் குடும்பம்தான். அதனால் முடிந்த அளவு கூட்டுக் குடும்பத்தில் வாழ முயற்சிக்க வேண்டும். தனிக்குடும்பமாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டாலும் முதியவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். முதியோர்களை, முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். முதியவர்களோடு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.
↱ நாட்டிற்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்து உடல் தளர்ந்த முதியோர்களை, தங்கள் வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இளைய தலைமுறையினரின் கடமையாகும்.