Merry Christmas மெரி கிறிஸ்துமஸ்
நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம்
இயக்கம்: ஸ்ரீராம் ராகவன்

அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் இவர்களுடன் சேர்ந்து ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
விஜய் சேதுபதியின் 96 படத்தை பார்த்து தான் அவரை இந்த படத்தில் புக் செய்தோம் என கத்ரீனா கைஃப் பேட்டியிலேயே சொல்லியிருந்தார். படமும் கிட்டத்தட்ட அதே போல ஒரே இரவில் நடக்கும் கதை தான். ஆனால், அதில் காதல் மட்டுமே வழிந்தோடியது. இங்கே காதலை தாண்டி ஒரு பக்கா கிரைம் பக்கவாட்டில் ஓடி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுத்து ரோலர் கோஸ்டர் ரைட் போல மாறிவிட்டது.
மும்பை என பெயர் மாறுவதற்கு முன்பாக பாம்பே என அழைக்கப்பட்ட வந்த மும்பை நகரில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன்பு இரவு நடக்கும் கதை தான் இந்த படம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து பம்பாய்க்குத் திரும்பும் விஜய் சேதுபதி ஒரு ரெஸ்டரன்ட்டில் மகளுடன் இருக்கும் கத்ரீனா கைஃபை சந்திக்க இருவருக்கும் ஏற்படும் பழக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனை கடைசியில் வரும் ட்விஸ்ட் தான் இந்த படத்தின் கதை.
ஆல்பர்ட் ஆரோக்கியராஜ் ஆக நடித்துள்ள விஜய்சேதுபதி பல இடங்களில் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டுவதை இந்த படத்திலும் தவறவில்லை. மரியாவாக கத்ரீனா கைஃப் கச்சிதமாக நடித்துள்ளார். ஒரே நாளில் பழகும் இவர்கள் டேட்டிங் வரை செல்வது போன்ற காட்சிகளும் ஒரு பெரிய சிக்கலில் விஜய்சேதுபதியை சிக்க வைக்க கத்ரீனா கைஃப் முயல்வதும் அதில் இருந்து விஜய்சேதுபதி எப்படி தப்பிக்கிறார். கத்ரீனா கைஃப்பை காப்பாற்றுகிறாரா? இல்லையா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என திரைக்கதையில் சித்து விளையாட்டு விளையாடி இருக்கிறார் ஸ்ரீராம் ராகவன்.

படத்தின் மேக்கிங், எடிட்டிங், கலை, ஆடை வடிவமைப்பு என அனைத்துமே டாப் கிளாஸ். ஸ்ரீராம் ராகவனின் தனித்துவமான டார்க் காமெடி த்ரில்லர் இயக்கம் இந்த படத்தையும் பார்க்க வைக்கிறது. விஜய்சேதுபதி தனக்கே உரிய பாணியில் ஸ்கோர் செய்கிறார். கத்ரீனா கைஃப்பின் பர்ஃபார்மன்ஸ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். கேமியோவாக வரும் ராதிகா ஆப்தே. ராதிகா சரத்குமாரின் டார்க் காமெடி நடிப்பு என ஏகப்பட்ட பலம் இந்த படத்திற்கு உள்ளது.
ஆனால், கிளைமேக்ஸ் நெருங்குவதற்கு முன்னதாக அவிழ்க்கப்படும் ஒரு பெரிய ட்விஸ்ட் மற்றும் அதற்கு ஏற்ப செட்டப் செய்யப்படும் செயற்கைத் தனமான காட்சிகள் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து விடுகின்றன. அந்தாதுன் அளவுக்கு சிறப்பான படமாக மெரி கிறிஸ்துமஸ் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால், ஓவர் நைட்டில் நடக்கும் விசித்திரமான கதையை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.