கொரோனா தொற்று காரணமாக திரையுலக கலைஞர்களின் அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 45.
தமிழில் ‘வல்லரசு’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நித்திஷ் வீரா. கூத்துப்பட்டறை நடிகரான நித்திஷ், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006ல் வெளியான ‘புதுப்பேட்டை’ படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
கேட்டரிங் மாணவரான நித்திஷ் நடிப்புத்துறையில் கொண்ட ஆர்வத்தில் அவரது உறவினரான இயக்குநர் மஹாராஜன் மூலமாக ‘வல்லரசு’ படத்தில் அறிமுகமானார். காவல்துறை குடும்பத்தை சேர்ந்த இவர் பின்பு கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.
அதன்பிறகு ‘வெண்ணிலா கபடி குழு’, ‘காலா’, ‘ராட்சசி’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் இவரது நடிப்பும் கதாப்பாத்திரமும் பேசப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நித்திஷ் வீரா இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில் சுவாசப்பிரச்சனை காரணமாக இறந்தார் என அவரது சகோதரர் சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘லாபம்’ படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.