இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு, அவசர வழக்காக ஏற்கப்பட்டு, வரும் 28ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று,உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது. தமிழகத்தில், வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன் காலியாக இருக்கும் 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மொத்தம் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிவுள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானதற்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள், ‘மொத்தம் உள்ள 21 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தன.
இதுதொடர்பாக, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 16ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே மற்றும் எஸ். ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இன்னும் 2 வாரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையே மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ். இளங்கோவன், ஆர்எஸ். பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ‘அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கும் முன், 3 தொகுதிகளுக்கும் 18 தொகுதியோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்த முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் 3 தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே மற்றும் எஸ். ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘காலியாக உள்ள 3 தொகுதிகளில் 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மற்றொரு தொகுதியின் வழக்கும் வாபஸ் பெறவுள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பரீக்கர, கடந்த சில நாட்களுக்கு முன் காலமானபின், அடுத்த ஒருசில நாட்களில் அவரது தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, தற்போது நடக்கவுள்ள மக்களவை தேர்தலுடன், அந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வௌியிட்டுள்ளது. எனவே, அதே நடைமுறையை பின்பற்றி, தமிழகத்தில் 18 தொகுதிளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை விடுத்தார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘இம்மனு ஏற்கப்படுகிறது. வருகிற வியாழக்கிழமை (மார்ச் 28) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று அறிவித்தனர்.
கடந்த 16ம் தேதி, தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு முன்னதாக திமுக தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்காக நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டதால், இம்மனு அவசர வழக்காக நீதிபதிகள் ஏற்று விசாரணையை 28ல் நடத்துவதாக அறிவித்தனர். அன்றைய தினம் தேர்தல் ஆணையம் சார்பில், தங்களது தரப்பு பதிலை அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.