பிராம்ப்டனில் உள்ள பூங்காவில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து பீல் பொலிசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வழிபோக்கர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் 911 என்ற இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் பெண் ஒருவரை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள பொலிசார், பிராம்ப்டன் பூங்காவில் மரணமடைந்த நபர் 64 வயதான Dalbir Randhawa என்பதை வியாழக்கிழமை அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் அவரது கணவர் 64 வயதான Jarnail Randhawa கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த பகுதி இவர்களின் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்துள்ளதால், நடக்க சென்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அதுவே Dalbir Randhawa மரணத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தம்பதி இருவரும் வாக்குவாதில் ஈடுபடுவதை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுமாறு பொலிஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.