சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரம் எனப் பல்வேறு பில்டப்புகளோடு திரைக்கு வந்திருக்கிற ‘ஜெயிலர்’ மாஸ் காட்டியதா? இல்லையா?
படத்தின் பெயரே ஜெயிலர் எனும்போது, ரஜினிகாந்த் ஜெயிலராக இருப்பார் என்பதும் பிறகு ஒரு குடும்பத்தைக் காட்டும் போது, அந்த குடும்பத்திற்கு வில்லன்களால் சிக்கல் வந்தால் அதைத் தன்னுடைய வயதான காலத்தில் எப்படி சண்டையிட்டு சரி செய்வார் என்பது யூகித்த கதை தான். ஆனால் திரைக்கதையில் சில திருப்பங்களும், அதிரடிகளும் இருக்கின்றன.
சிலை கடத்தும் கும்பலை எதிர்க்கும் நேர்மையான காவல்துறை அதிகாரியான வசந்த் ரவி, திடீரென காணாமல் போகிறார். உடல் கிடைக்காததால் இறந்து போய்விட்டார் என்று முடிவுக்கு வருகிறது காவல்துறையும் அவரது குடும்பமும். மகன் சாவுக்கு காரணமான வில்லனை அப்பாவான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி முத்துவேல் பாண்டியன் கொலை செய்கிறார். ஆனால் மீண்டும் குடும்பத்தினை கொலை செய்ய வரும்போதுதான் சிலை கடத்தல் கும்பல் நெட்வொர்க் பெரியது என்பது தெரிய வருகிறது. அந்த கும்பலிடமிருந்தும் கொலைக்கு அஞ்சாத வில்லனிடமிருந்தும் குடும்பத்தை காப்பாத்தினாரா? மகன் இறப்பு பற்றி ஏதாவது தெரிய வந்ததா? என்பதுதான் திரைக்கதையில் திருப்பங்களோடு உள்ள மீதிக் கதை.
காலங்காலமாக தமிழ் சினிமா சல்லடை போட்டு சலித்த கதை தான். ஆனால், அதை திரையில் ரஜினிகாந்த் என்கிற பிம்பத்தோடு இந்த கதையினை பார்க்கும் போது அவரது ஸ்டைலில் வசனம், காட்சி அமைப்புகள், பில்டப்புகள் என்று சுவாரசியத்தன்மையை கூட்டத்தான் செய்கிறது.
வில்லன் கதாபாத்திரம் எந்த அளவிற்கு வலிமை மிக்கதாக இருக்கிறதோ அப்போது தான் கதாநாயகனுக்கு இன்னும் பலம் கூடும். ரஜினிகாந்த் போன்ற மாஸ் நாயகனை எதிர்க்கிற வில்லனைத் தான் படத்தின் துவக்கத்திலேயே நமக்கு காட்டி விடுகிறார்கள். உடன் இருந்து வேலை செய்தவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தால் தலைகீழாக தொங்கவிட்டு ஆசிட் டேங்கிற்குள் முக்கிக் கொல்கிற அளவிற்கு கொடூரமான வில்லன் தான் விநாயகன். கடைசி வரை கொடூரத்திற்கு பஞ்சமே வைக்காத அளவிற்கு படம் முழுவதும் இருக்கிறார்.
வயதான காலத்தில் பறந்து பறந்து அடிக்க முடியாது என்கிற உண்மையை உணர்ந்தவர். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றவும், வில்லனை எதிர்க்கவும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று உதவி கேட்டு அடியாட்களை வாங்கி வருகிறார். ரஜினிகாந்த் போன்ற பெரிய தலைக்கட்டு உதவி கேட்டுப் போகிறார் என்றால் உதவி செய்கிற ஆளும் பெரிய அளவிற்கான ஆளாக இருக்க வேண்டுமென்பதற்காகவே கர்நாடகா, பீகார், பஞ்சாப், கேரளா என்று பெரிய பெரிய தலைக்கட்டாகவே தேடிப் பிடித்திருக்கிறார்கள்.
கெஸ்ட் ரோலில் வந்து போகிற சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் மூவருக்குமான இண்ட்ரோ மற்றும் பில்டப்புகள் அவரது ரசிகர்களையும் இப்படத்தைக் கொண்டாட வைக்குமென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தெலுங்கு நடிகர் சுனிலை மட்டும் காமெடியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இயக்குநர் நெல்சனின் பிளாக் ஹியூமர் படம் முழுக்க விரவிக் கிடக்கிறது. எவ்வளவு சீரியசான காட்சியிலும் ஒரு டயலாக்கை கொண்டு வந்து சிரிக்க வைக்கிற வித்தை, வேறு எந்த இயக்குநருக்குமே கை வராத கலை. நெல்சனின் நகைச்சுவை வசனத்தை மாடுலேசனோடு சொல்லி சிரிக்க வைக்கிற வேலையை யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லி, வில்லனோடு உடன் இருக்கும் நண்பன் என ஆளுக்கொரு இடமாக ஸ்கோர் அள்ளுகிறார்கள். இயக்குநர் நெல்சன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தை இயக்குகிற அதே வேளையில், சாதாரண நடிகர்களைக் கொண்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிற படத்தை எப்போதும் கொடுப்பார் என்று நம்புவோமாக.
ரஜினிகாந்த் திரையில் தோன்றியதுமே பாடல் தான் என்று பழகிப்போன ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஓப்பனிங் சாங் இல்லை. ஆனால் இடையிடையே ‘தலைவரு அலப்பறை’ என்ற வரிகளும் தீம் மியூசிக்கும் பில்டப்புகளை அள்ளி வீசிக்கொண்டே இருக்கிறது. படம் முழுவதும் அனிருத் பின்னணி இசைதான் இன்னுமொரு கதாநாயகனாக இருக்கிறது. படம் பார்த்து முடிந்தும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காவாலா பாடல் முழுவதும் ரசிகர்களை ஆட வைத்த தமன்னா நடிகையாகவே படத்தில் வந்து போகிறார். ரம்யா கிருஷ்ணனுக்கும் – மிருனாளுக்கும் டிஸ்யூவால் ரத்தத்தை துடைப்பதைத் தவிர பெரிய வேலை படத்தில் இல்லை.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், அடிக்கடி ஹெலிகேம் ஷாட்டுகளால் பிரம்மாண்டத்தையும், குளோசப் ஷாட்டுகளால் எமோஷ்னல்களையும் காட்டி சிறப்பிக்கிறார். படத் தொகுப்பாளர் நிர்மல், கலை இயக்குநர் கிரண் அவரவர் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஸ்டண் சிவாவின் சண்டை அமைப்பு கைகளுக்கு வேலையே இல்லை. சுத்தியல், கத்தி, அரிவாள், சதக் சதக் தான். இன்னும் விட்டால் ஸ்நைப்பர் துப்பாக்கியால் டுமீல் டுமீல் தான்.

படம் முழுக்க வன்முறைக் காட்சிகள் நிரம்பி இருக்கின்றன. தலை துண்டாகிறது. ரத்தம் தெறிக்கிறது. குழந்தைகளோடு எப்படி பார்ப்பது என்ற கேள்வி மேலோங்குகிறது. இயக்குநர் நெல்சன் இயக்குற படத்துல ரஜினிகாந்த் நடிக்கிற படத்துல லாஜிக் பார்க்கலாமா என்பது எப்போதும் கேட்கிற கேள்வி தான். மகனுக்காக கொலை செய்யப்படுகிறவர்களின் உடலைக் கைப்பற்றாதா? போலீஸ் கொலைகாரனைத் தேடாதா? ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருக்காக முன்னாள் குற்றவாளிகளும், ஸ்நைப்பர் ஸ்பெசலிஸ்டுகளும் இவ்வளவு மெனக்கெட்டு வருவார்களா என்றெல்லாம் லாஜிக் கேள்விகளை முன் வைத்தால் நிறைய கேட்டு வைக்கலாம்.
இப்படி படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம் இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற கேரக்டர்கள் சந்தடி கேப்பில் ஸ்கோர் செய்து விடுகின்றனர். அதிலும் சிவராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகள், அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது. இப்படி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அனிருத் தான் படத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்.
அந்த அளவுக்கு அவருடைய இசை அனல் பறக்கிறது. அதில் காவாலா, தலைவர் அலப்பறை ஒரு ரகமாகவும் ரத்தமாரே பாடல் ஒரு ரகமாகவும் ரசிக்க வைக்கிறது. இப்படி தலைவருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் ஒரு அசத்தல் கம்பேக் கொடுத்திருக்கிறார் நெல்சன். இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்பு தட்டினாலும் மொத்தத்தில் பதுங்கி இருந்து பாய்ந்த முத்துவேல் பாண்டியன்
ஜெயிலர் – மொத்தத்தில், சுமாரான முதல் பாதி, இழுவையான இரண்டாம் பாதி .