ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐசிஎம்ஆர் குழுவிற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு இலவசமாக ஆயுர்வேத மருந்து கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகிறது, இந்த மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை அந்த பகுத உள்ளூர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலர் உடனே நல்ல பலன் கிடைப்பதாக சொல்ல, மெல்ல மெல்ல அவரது புகழ் பரவ தொடங்கியது. குறுகிய நாட்களிலேயே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் நெல்லூருக்கு படை எடுத்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்திற்கு இலவச மருந்தினை வாங்க குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை குவியத்தொடங்கினர்.
நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று செல்கிறார்கள். பலர் சமூக இடைவெளியை மறந்து எப்படியாவது அந்த இலவச மருந்தை வாங்கிவிட வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். அந்த மருந்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குழுவினரும் நேரில் சென்று விசாரித்தனர்
முக்கியமான அவர் கண்ணிற்கு சொட்டு மருந்து கொடுத்த உடன் ஆக்சிஜன் லெவல் உடனடியாக அதிகரிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இநத் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை மருந்து குறித்து எவரும் புகார் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கொடுக்கும் மருந்துகளை மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆய்வத்திற்கு அனுப்பி உள்ளனர். ஆய்கத்தின் முடிவு வந்த உடன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க கூடாது என்று ஆய்வுக் குழு ஆனந்தையா குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர் எனினும் மருந்து விநியோகம் நடந்த வருகிறது. மிகப்பெரிய கூட்டம் கூடிவருவதால் 3வது அலை பரவும் அபாயமும் எழுந்துள்ளது. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆயுர்வேத மருந்து குறித்து ஐசிஎம்ஆர் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.