பாண்டிய மன்னர்களில் தவறு செய்தவர்கள் எவரும் இலர். ஆயினும் அவர்கள் தவறு செய்வதற்கான சூழல் உருவாகியது. இரவு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் நகர்வலம் செல்லும் பொழுது கீரந்தை என்பவனின் மனைவி, கணவன் வெளியே சென்ற பொழுது வீட்டில் தனித்து இருந்தாள். அச்சமயம் ஒருவிதமான ஆவல் மற்றும் சூழ்நிலையின் காரணமாக அந்த வீட்டின் கதவை பாண்டிய மன்னன் தட்டினான். பொழுதோ நள்ளிரவு. காவல் செய்ய வேண்டிய அரசன் கடமை தவறி செயல்பட்டான்.

தன் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று அச்சம் கொண்ட அந்தப் பெண், பாண்டியனுடைய ஆட்சியில் பாதுகாப்பு என்பது இல்லையோ? மன்னவன் காவல் காக்கும் நகரம், கவலை கொள்ள வேண்டாம் என்று என் கணவர் சொல்லிப் போனாரே அவர் வார்த்தை இப்பொழுது பொய்யானதா? அவர் இல்லாத நேரத்தில் காலிகள் தொந்தரவு செய்கின்றார்களே என்று தட்டியவன் செவி சுடும் வண்ணம் வாய்விட்டு குரல் எழுப்பினாள்.
தீர்ப்பும், தண்டனையும்:
உள்ளிருந்த அந்தப் பெண் கூறியதை கேட்ட பாண்டிய மன்னன், தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எண்ணி, மிகவும் மனம் வருந்தினான். தான் செய்த இந்த செயலுக்கான தண்டனையை, அவையின் முன்னிலையில் வழக்காக வைத்து தனக்குத் தானே தீர்ப்பையும் வழங்கிக் கொண்டான். தனது கையை வெட்டி, செய்த தவற்றுக்கான தண்டனையையும் அனுபவித்தான். கையில்லா இடத்தில் பொய் கை ஒன்றை வைத்துக் கொண்டான்.
இந்திரன் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடிய பாண்டிய மன்னனின் கையானது இப்பொழுது அவனிடத்திலேயே இல்லை. அதற்கு பதிலாக பொய்யான ஒரு கை அவனிடத்திலிருந்தது. தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் செய்த தவற்றை உணர்ந்த உடன் அதை திருத்திக் கொள்ளக் கூடியவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்களில் பாண்டியர்கள் உயர்ந்தவர்கள். தான் செய்த செயல் தவறு என்று புரிந்து கொண்டால், அவர்கள் உடனே திருத்திக் கொள்வார்கள். இது அவர்களுடைய மரபு வழியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியும் கூட.
அத்தகைய மரபில் வந்தவன் தான் பாண்டியன் நெடுஞ்செழியன். அவனும் ஒரு முறை சரி, தவறு என ஆராயாது அவசரப்பட்டு ஒரு தீர்ப்பையும் வழங்கிவிட்டான். அது தெரிந்தவுடன் அவனும் தன்னைத்தானே திருத்திக் கொண்டான்.
புலவன் பராசரன்:
புகார் நகரத்தில் பராசரன் என்னும் புலவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் புலமை மிகுந்தவன். அவனுடைய புலமைக்கும், ஞானத்திற்கும் பல அரசர்களிடமிருந்தும் வெகுமதியை பெற்றான்.
அப்படி ஒருமுறை அவன் சேர அரசனை பாடி பரிசுகளை பெற்று, அவனுடைய ஊருக்கு செல்லும் பொழுது பாண்டிய நாட்டின் வழியாக மறையவர் வாழும் பகுதியில், பயண களைப்பினால் இளைப்பாற வேண்டும் என்று எண்ணினான். அவன் எண்ணியது போலவே இளைப்பாறுவதற்கு அரச மரம் ஒன்று அவன் கண்ணில் தென்பட்டது. அம்மரத்திற்கு அடியில் சென்றவன், தான் கொண்டு வந்த பொதிகளை அருகில் வைத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அந்த ஊரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். சிறுவர்களோடு விளையாட துவங்கிய அவன், தனது பயணக் களைப்பை மறந்தான். அச்சிறுவர்களிடம் விளையாட்டாக தன்னுடன் சேர்ந்து வேதம் ஓதினால் ஒவ்வொருவருக்கும் பரிசுகள் தருவதாக கூறினான்.
போட்டியும், பரிசும்:
பரிசு என்று கூறியதும், அச்சிறுவர்களும் தங்களால் முடிந்த அளவு பராசரனோடு இணைந்து வேதத்தை உச்சரிக்க துவங்கினார்கள். இருப்பினும் அதில் ஒரு சிறுவன் மட்டுமே சிறப்பாகவும், தெளிவாகவும் அவன் கூறிய வேத மந்திரங்களை உச்சரித்தான்.
அச்சிறுவன் வார்த்திகன் என்பவனின் மகனான தக்கிணன் ஆவான்.
அவன் உச்சரித்த மந்திரங்களும், அவனுடைய உடல் பாவ அசைவுகளும் பராசரனை மிகவும் கவர்ந்தது. அதனால் அவன் கூறியபடியே அச்சிறுவனுக்கு தான் பெற்று வந்த பரிசில் இருந்த அணிகலன்கள் சிலவற்றையும், கைவளையையும், தோடு போன்றவற்றையும் கொடுத்து பாராட்டி, அவனை ஆசீர்வதித்து, கவனமாக இதை வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்துவிடு என்று கூறிவிட்டு, தனது ஊருக்கான பயணத்தை மேற்கொண்டான்.
போட்டியில் பங்கேற்று தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை தன் தந்தையிடம் கொடுத்து, நிகழ்ந்தவற்றை கூறினான் அச்சிறுவன். அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
செல்வம் எதுவும் இல்லாத இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் திடீரென்று விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்திருப்பதை கண்ட அரச காவலர்கள், இவர்களுக்கு ஏதோ புதையல் கிடைத்திருக்குமோ? அரசுக்கு கொடுக்க வேண்டியதை இவர்கள் வைத்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்களோ? என்று எண்ணி வார்த்திகனை கைது செய்து சிறையில் இட்டனர்.
தனது கணவன் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்ட வார்த்திகனின் மனைவியான கார்த்திகை, அரசு அதிகாரிகளிடம் நிகழ்ந்தவற்றை கூறினாள். ஆனால் அவர்களோ எதையும் நம்பவில்லை. இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதாக எண்ணி, இவளுடைய கூற்றுக்கு அவர்கள் செவி சாய்க்கவும் இல்லை. நிகழ்ந்தது என்ன? என்பதை ஆராயவும் இல்லை. மனம் உடைந்த கார்த்திகை மற்றும் தக்கிணன் அவ்வூரில் இருக்கக்கூடிய கொற்றவை கோவிலில் முறையிட்டனர்.
மூடப்பட்ட கதவுகள்:
நடந்தது என்ன? என்பதை அறிந்திருந்த கொற்றவை, இவளுக்கு நீதி வாங்கி கொடுக்காமல், தனது கோவில் கதவுகளை மூடிக்கொண்டாள். பலவாறு முயற்சி செய்தும் கோவிலின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இறுதியாக இச்செய்தியானது அரசனின் செவிகளுக்கு எட்டியது.
இதைக் கேட்ட அரசன் தனது ஆட்சியில் ஏதோ தவறு நடந்திருக்கின்றது என்பதை யூகித்துக் கொண்டு, நிகழ்ந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தான்.
நடந்ததை அறிதல்:
உடனடியாக இந்த வழக்கை குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்காக ஒற்றர்களை நாடெங்கும் அனுப்பி, அவர்கள் கூறியது உண்மையா? என்று விசாரித்தான். உண்மை நிகழ்வுகள் என்ன? என்பதை தெளிவாக அறிந்து கொண்டான். எந்த ஒரு தவறும் செய்யாத அந்த சிறுவனின் தந்தையை சிறையில் அடைத்தது குற்றம் என்பதை புரிந்து கொண்டதும், அவரை சிறையிலிருந்து விடுதலை செய்ததோடு, அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பும் கேட்டான்.
யாம் இழைத்த இத்தவறுக்காக தங்கால் என்னும் ஊரில் கழனிகளையும், வயலூரில் உள்ள வயல்களையும் இறையிலி நிலங்களாக தானம் செய்தான்.
புதிய சட்டம் இயற்றுதல்:
இந்த நிகழ்வுக்கு பின்னால் அரசர் புதிய சட்டங்களை வரையறுத்தார். அதாவது, பிறர் தரும் பொருள் படு பொருள் எனப்படும். அது பெற்றுக் கொண்டவற்கு மட்டுமே உரித்தாகும். அதேபோல் மண்ணில் இருந்து கிடைக்கும் பொருள் எடு பொருள் ஆகும். யார் அந்த புதையலை எடுக்கின்றார்களோ, அவர்களுக்கே அந்த புதையலும் உரியதாகும் என்று கூறினார். இனிவரும் காலங்களில் படு பொருளுக்கும், எடு பொருளுக்கும், அரசுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று அறிவித்தார். யார் எடுக்கின்றார்களோ, யார் பெறுகின்றார்களோ அவர்களுக்கே அவை உரித்தானவை என்று தன்னை திருத்திக் கொண்டது மட்டுமல்லாமல் சட்டத்தையும் திருத்தியது இதே நெடுஞ்செழிய பாண்டியன் தான்.
அதே அரசன் இப்பொழுது திருத்த முடியாத ஒரு தவறினை செய்து விட்டான்.
இவ்வளவு சிறப்புகளும், வலிமையும் நிறைந்த இந்த பாண்டிய நகரம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை நிறை இருள் மிகுந்த எட்டாம் நாளில் எரியூட்டப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அவர்களுடைய முன்னோர்கள் பெற்ற சாபம் தான். விதி மிகுந்த வலிமையானது அல்லவா!
சகுனங்களும், நிமிர்த்தங்களும் இதை தடுக்கும் வண்ணமாக முன்கூட்டியே யாவருக்கும் உரைத்தன. ஆனால் அதை யாவரும் புரிந்து கொள்ள முடியவில்லை. மதுரை மாநகர் மட்டுமின்றி, அரசனுக்கும் கேடு விழும் என்று ஏடுகள் கூறி இருந்தன.
விதியின் விளையாட்டு:
யாரும் அறிந்து கொள்ள முடியாத முற்பிறப்பில் நாம் செய்த தீவினைகள் உறுத்து வந்து வருத்தும் போது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாதல்லவா!
அதேபோல் தான் கோவலன் கொல்லப்பட வேண்டும் என்பது முற்பிறப்பில் அவன் செய்த தீவினையின் பலனாகும்.
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் பெற்ற சாபம், கோவலனை கொல்வதில் ஒரு கருவியாக பயன்பட்டது. அதனால் மதுரையும் எரிந்தது. ஒரே காலத்தில் இருவருடைய முன்வினை பலன்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறி தன் கதையை நிறுத்தியது மதுராபதி.
கோபம் தணிதல்:
முன் ஜென்ம கர்ம வினைகளை அறிந்து கொண்டதும் கண்ணகியின் மனதில் இருந்த கோபம் படிப்படியாக குறைய தொடங்கியது. அவளும் சமாதான நிலையில் இருந்தாள். ஆனால் நகரின் மையத்தில் அவள் செய்த சபதத்தை மட்டும் அவளால் இன்னும் மறக்கவே முடியவில்லை.
கண்ணகியின் மனதில் ஓடிய எண்ணங்களை தெளிவாக புரிந்து கொண்ட மதுராபதி, எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். நீ நகரின் மையத்தில் செய்த சபதம் நிறைவேற சங்கமனின் மனைவியைப் போல நீயும் பதினான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றாள்.
இதைக் கேட்டதும் பதினான்கு நாட்கள் நான் காத்திருக்க வேண்டுமா? என்று மிகுந்த ஆச்சரியத்துடன் மதுராபதியை நிமிர்ந்து பார்த்தாள் கண்ணகி.




