சிறுகதை

அப்பா சொன்ன வாசகம்

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் தனது மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ஏன் தூங்கவில்லை? என்றார்.

மனசு சரியில்லை, என்றாள் மகள்.

உனக்கு அன்பு கொடுக்க நாங்கள் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை? என்றார் அப்பா.

இன்னைக்கு அலுவலகத்தில் ஒரு விஷயம் நடந்தது, என்றாள் மகள்.

அது என்னவென்று நானும் தெரிந்துகொள்ளலாமா? என்றார் அப்பா.

ம்ம்.. சொல்றேன், என்று மகள் சொல்ல ஆரம்பித்தாள்…

நான் வேலை செய்யும் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போது தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அவளிடம் எப்போதும் நட்புடனும், உரிமையுடனும் பழகுவேன்.

தன் குழந்தையின் முதல் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதற்காக அலுவலகத்தில் உள்ள ஒரு சில ஊழியர்களிடம் பண உதவி கேட்டாள். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

நான் அதை பார்த்துவிட்டு, அவள் கேட்காமலேயே முன்வந்து பணம் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டு எனக்குத் திரும்ப திரும்ப நன்றி சொன்னாள்.

பிறந்தநாள் நெருங்கியதும் அவள் நடவடிக்கையில் சிறிய மாற்றம் தெரிந்தது. என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். பிறந்தநாளுக்கு கூட என்னை பெயருக்கு தான் அழைத்தாளே தவிர, மனமார அழைக்கவில்லை.

ஆனால் அவளுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்களை எல்லாம் திரும்பத் திரும்ப அன்போடு அழைத்தாள். என்னை வேண்டுமென்றே ஒதுக்கியதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நான் அவளிடம், ‘பிறந்த நாள் அன்று எனக்கு வேறு வேலை இருக்கிறது, வர முடியாது’ என்று சொல்லிப் பார்த்தேன். அவள் உடனே, ‘சரிங்க மேடம், உங்க இஷ்டம்’ என்று சொல்லிவிட்டாள். என்னை கண்டிப்பாக வரச்சொல்லி வற்புறுத்துவாள் என்று எதிர்பார்த்தேன்.

சரி.. பிறந்தநாள் முடிந்துவிட்டதா? நீ போகவில்லையா? என்று கேட்டார் அப்பா.

நேற்று பிறந்தநாளுக்குப் போகவில்லை. அந்த குழந்தைக்காக இந்த பொம்மையெல்லாம் வாங்கி வைத்தேன். அவள் அழைக்காததாலும், அந்த குழந்தைக்கு பொம்மை வாங்கி வைத்து அதை கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சியும் என்னை துன்புறுத்துகிறது அப்பா. என்னால் தூங்கவே முடியவில்லை, என்றாள் மகள்.

அப்பா உடனே.. நீ அந்த பெண்ணுக்கு பண உதவி செய்த பிறகு அவளை எதற்காகவாவது எல்லோர் முன்னாடியும் உரிமையுடன் கிண்டல் செய்தாயா? என்று கேட்டார்.

எனக்கு நியாபகம் இல்லை அப்பா, என்றாள்.

நல்ல யோசித்து பார்… நிச்சயம் எதாவது ஒன்று நடந்திருக்கும். அதுக்குள்ள அப்பா உனக்கு ஜூஸ் போட்டு எடுத்து வருகிறேன்.

அப்பா வந்ததும் மகள் ஆர்வத்துடன் சொன்னாள். ஆமாம் அப்பா.. நான் பண உதவி செய்து ஒரு வாரத்தில் அவள் ஒரு மஞ்சள் கலர் புடவை அணிந்து வந்திருந்தாள். அது அவள் கணவன் அன்போடு எடுத்துக் கொடுத்ததாம்.

நான் அதைப் பார்த்த உடனே, ‘என்னம்மா மஞ்ச கலரு… இதை எல்லாம் கட்டுனா கூலிங் கிளாஸ் போட்டுதான் பார்க்கணும் போல கண்ணு கூசுது’ என்றேன். அதற்கு சுற்றி இருந்த அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவளும் சிரித்தாளே!

நீ அவள் குழந்தையின் பிறந்தநாளுக்கு உதவி செய்துவிட்டு அவளை அவமானப்படுத்தினால் பதிலுக்கு உன்னிடம் எப்படி அவள் கோபத்தை காட்ட முடியும். வேறு வழியில்லை.. சிரித்து தானே ஆக வேண்டும்.

நான் சொல்ற மாதிரி செய், என்று அப்பா ஒரு யோசனை சொன்னார்.

அதன்படி மறுநாள் காலை ஒரு மணி நேரம் முன்பாகவே அவரது மகள் கிளம்பி அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றாள்.

தொட்டிலில் கிடந்த மகனை தூக்கிக் கொஞ்சி, பிறந்த நாளுக்கு வர முடியலடா கண்ணா! இந்தா ஆன்ட்டி உனக்கு பொம்மை வாங்கி வந்திருக்கேன் பாரு.. என்று பொம்மையை அருகில் வைத்தாள்.

அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்த்து, நேத்து எங்க குடும்ப நிகழ்ச்சியில் என் சொந்தக்கார பையன் ஒருத்தன், என் பத்தாம் வகுப்பு மார்க் குறைவானது பற்றி எல்லோர் முன்னாடியும் சொல்லி கிண்டல் செய்தான்.

அவன் அதை ஜாலிக்காக செய்தாலும் எல்லோர் முன்னாடியும் அப்படி கிண்டல் செய்ததை என்னால் தாங்க முடியவில்லை.

அப்போதுதான் நான் உன்னை கிண்டல் செய்தபோது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. என்னை மன்னித்துக் கொள், என்றாள்.

வேலை செய்யும் பெண் கண்ணீர் மல்க இவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

அவள் அங்கிருந்து கிளம்பி அலுவலகத்தை நோக்கி வரும்போது, ‘ஒரு மனிதனுக்கு நீ கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவன் தன்மானத்தில் கை வைத்துவிட்டால் அவன் உன்னை எதிர்க்கவே செய்வான்’ என்று அப்பா சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.

அதை நினைத்து புரிதலுடன் சிரித்துக் கொண்டாள்.

Recent posts

என்னோட சீட் .

சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும்....
Thamil Paarvai

கடல் அலை.

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய்...
Thamil Paarvai

கவசத்திற்குள் இரு ஆவி.

வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்! சர். காரெய்ன் மற்றும் சர். டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும்...
Thamil Paarvai

குருவி குஞ்சு.

கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது,காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து...
Thamil Paarvai

Leave a Comment