இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கும் யோசனை நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.
40 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தச் செய்யாமை மற்றும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி, சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அணிகளை அடக்குதல், இந்த சட்டத்தை பயன்படுத்தி, சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், தொழில்சார் நிபுணர்கள், எழுத்தாளர்களை பொலிஸில் தடுத்து வைப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான கடந்த காலங்களில் சர்வதேசத்தில் தொடர்ந்தும் பேசப்பட்டு வந்தது.
ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்திருந்தது.
மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும் போர் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதாகவும் அன்றைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.
வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டதன் பிரதிபலனாக இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்தது.
எனினும் தற்பொது ஏற்பட்டுள்ள நிலைமையில், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காமல் போனால், இலங்கையின் ஆடை உற்பத்தி தொழில் உட்பட பல தொழிற்துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.