
அறிந்தேன், தொடர்ந்தேன்:
கண்ணகியை சிறிது தூரம் பின்தொடர்ந்த மதுரை மங்கை, அவளிடத்தில் உமது செயலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இருப்பினும் நான் கூற இருப்பதை சற்று பொறுமையுடன் கேட்பாயா? என்றாள்.
மிகுந்த வேதனையிலும், வருத்தத்திலும் இருந்த கண்ணகி, வலது புறமாக திரும்பி யார் நீ? என்னை ஏன் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றாய்? நான் அடைந்த துயரம் நீ அறிவாயா? என்று கோபத்தோடு கேட்டாள்.
உமது துயரத்தை யான் அறிவேன். அதை அறிந்து தான் உம்மை பின்தொடர்கின்றேன். உன்னுடைய கணவன் கொலையுண்டது குறித்து எமக்கு பெரும் வருத்தம், அதற்காக வருந்துகின்றேன் என்றாள் மதுரை மங்கை.
முதலில் நீங்கள் யார்? என்னுடைய முதல் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவே இல்லை என்றாள் உஷ்ணம் நிறைந்த விழிகளுடன்.
கதை கேட்பாயா?
யான் இந்த மதுரையை காக்கின்ற காவல் தெய்வம். எமது பெயர் மதுராபதி. எமது அரசனுக்கு ஏற்பட்டது ஒரு தீவினை விதி. அதே போல் தான் உமது கணவனுக்கும் ஒரு தீவினை உருவாகி இருந்தது. இருவரின் தீவினைகள் ஒரு சேர நேர்ந்ததன் விளைவு தான், இந்த மதுரை எரிப்பு. அது குறித்து சில வரிகள் பேசவே யான் உன்னை பின்தொடர்கின்றேன் அதை சொல்லவா? என்றது.
என்ன சொல்ல இருக்கின்றாய்?.. கூற வந்ததை கூறும் என்றாள் கண்ணகி.
முப்பிறவி பலன் கூறுதல்:
பாண்டியர்கள் அனைவரும் நெறி தவறாதவர்கள். மனதினை கட்டுப்படுத்தி வாழும் மரபினை சார்ந்தவர்கள். நெடுஞ்செழியன் இந்த பிறப்பில் எந்த ஒரு தவறும் செய்யாதவன் என்றது மதுராபதி.
இதைக் கேட்ட கண்ணகிக்கு இன்னும் சினம் அதிகரித்தது. அவர்கள் நெறி தவறாதவர்களா? ஏன் அவர்கள் தவறு செய்யவில்லையா? என் கணவனை கொன்றது தவறு இல்லையா? என்று கோபத்தோடு கேட்டாள்.
உன் கணவனின் மரணம் என்பது அவன் செய்த முன் வினைப்பயன் தான். அவன் முற்பிறப்பில் என்ன தவறு செய்தான் என்பது உமக்கு தெரியுமா? என்றது மதுராபதி.
காரணமானவன் அவன்:
என் கணவர் முற்பிறவியில் என்ன செய்தார்? என்று கேட்டாள் கண்ணகி.
முற்பிறவியில் உன்னுடைய கணவனின் செயலால், அருகில் உள்ள நாட்டிலிருந்து வந்த ஒரு வணிகன் கொல்லப்பட்டான். அதற்கு முழு காரணமும் உமது கணவன் தான்.
என்னது! என் கணவர் ஒருவரை கொல்வதற்கு காரணமாக இருந்தாரா? அது எப்படி? என்றாள் கண்ணகி.
மதுராபதி, கோவலனுடைய முற்பிறவி நிகழ்வுகளை எடுத்துரைக்க துவங்கியது.
சோலைகள் மிகுந்த எழில்மிகு நகரமாக இருந்தது கலிங்க நாடு. அந்த கலிங்க நாட்டினை சார்ந்து சிங்கபுரம், கபிலபுரம் என இரண்டு நகரங்கள் இருந்தன. இருநாட்டு அரசர்களும் ஒரு குலத்தை சார்ந்தவர்கள் தான். ஆயினும் ராஜ்ய அதிகார பிரிவினை குறித்து முரண்பாடு ஏற்பட்டதால், அங்கு போர்க்களம் உருவாகியது. இருவருக்கும் இடையே ஜென்ம பகையும் தோன்றியது. இரு நாடுகளுக்கும் இடையே எப்பொழுதும் சண்டையும், போரும் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்ததால், அதைக் கடந்து சென்று வியாபாரம் செய்வதற்கு எவருக்கும் தைரியம் இல்லை ஒருவனை தவிர. அவன் பெயர் சங்கமன். அவன் பிற நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசையும், ஆவலும் கொண்டிருந்தான்.
அவன் கொண்ட ஆசை, அதை செயல் வடிவில் மாற்றவும் அவனைத் தூண்டியது. அதனால் அவன் மாற்று வடிவம் கொண்டு, தன் மனைவியுடன் யாவரும் அறியா மாறுவேடத்தில், பல தடைகளை கடந்து ஒரு வழியாக சிங்கபுரத்தை அடைந்தான்.
இப்பிறப்பில் இருக்கக்கூடிய கோவலன், முந்தைய பிறப்பில் பரதன் என்ற பெயரில் சிங்கபுரத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தான்.
பல தடைகளை கடந்து தமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு வியாபாரத்தை துவங்கினான் சங்கமன்.
அப்பொழுது அரசுப் பணியில் இருந்த உமது கணவன் பரதன், அரசாங்கத்திற்கு ரகசிய ஒற்று ஒன்றை அனுப்பினான். அதாவது வியாபாரத்தை செய்து கொண்டிருக்கக் கூடிய சங்கமன் நமது எதிரி நாட்டை சேர்ந்த ஒற்றன் என்று.
மனித நேயமற்ற செயல்:
அதற்குக் காரணம் அவர்கள் இருவரிடத்திலும் இருந்த மதப் பற்று தான். பரதன் கொல்லா விரதமுடையவன். ஆனால் சங்கமன் அவன் போன்று இல்லாமல், அதில் விதிவிலக்கு கொண்டவனாய் இருந்தான். அதனால் அவனிடத்தில் வெறுப்புக் கொண்டு பரதன், சங்கமனை ஒற்றன் என்று காட்டிக் கொடுத்தான். இருவருக்கும் இடையே இருந்த மதம் மனிதநேயத்தை தொலைத்தது. அவன் கொலைக்கு காரணமாகவும் அமைந்தது.
பரதன் கூறிய கூற்றுகளை நம்பிய அரசன் சங்கமனைக் கொல்ல ஆணையும் பிறப்பித்தான். சங்கமனையும் கொன்றான்.
சங்கமன் எப்படி இறந்தான்? என்பதை சொல்லி முடித்த மதுராபதி, இப்பொழுது கூறு, சங்கமனின் மரணத்திற்கு யார் காரணம்? உன் கணவனான கோவலனுடைய முற்பிறவியாகிய பரதன் தானே என்றாள்.
இதைக் கேட்டதும் கண்ணகியால் எதுவும் கூற முடியவில்லை, அவளும் அமைதி கொண்டாள். பின் மதுராபதி, மீதி கதையை கூறத் துவங்கினாள்.
நீலியின் சாபம்:
கொலை செய்யப்பட்ட சங்கமனின் மனைவி நீலி என்பவள் அழுது துடித்தாள். எந்த ஒரு தவறும் செய்யாத தன் கணவனை அநியாயமாக கொன்றுவிட்டார்களே..! என்று வேதனையில் வருந்தினாள். அரசர்களிடம் சென்று முறையிட்டாள். வணிகர்கள் பலர் நிறைந்த இடங்களிலும், தன் கணவன் மீதான உண்மையை எடுத்துக் கூறினாள். ஊர் மக்களை நோக்கி நியாயத்தை வேண்டி நின்றாள். சேரிகளுக்கு சென்று தன் மனதில் இருக்கக்கூடிய குறைகளை கூறினாள். பல இடங்களுக்கு சென்று அலறினாள். நாட்கள் பதினான்கு ஆயின. பல இடங்கள் திரிந்து அலைந்தாள். மனம் குலைந்தாள். பின் இன்றைய தினம் தான் கணவனை அடையும் நாள் என்று எண்ணியவள், மலை ஒன்றின் மீது ஏறி தனது உயிரை விட்டு, மண்ணுலகை நீங்கி வானவர் நாட்டிற்கு தன் கணவரோடு சென்றடைந்தாள்.
மரணம் அடைவதற்கு முன்பு தன்னுடைய இந்த துயரத்திற்கு காரணமாக இருந்த அனைவரும் யான் அனுபவித்த இந்த துன்பத்தை, அவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் அளித்த பின் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். அவள் விட்ட அந்த சாபத்தின் விளைவுதான் இவ்வளவு நிகழ்வுகளும், விளைவுகளும் என்று மதுராபதி கூறினாள்.
கோபம் குறைதல்:
முற்பிறப்பில் ஏற்பட்ட இந்த சாபத்தின் விளைவு தான் கோவலனின் மரணத்திற்கு காரணம், அதுவும் எந்த ஒரு தவறும் செய்யாத ஒருவனின் மரணமும், அவளுடைய பத்தினியின் சாபமும் தானே அனைத்திற்கும் காரணம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டதும் கண்ணகியின் மனதில் இருந்த கோபம் குறைய துவங்கியது.
உன் கணவனின் முற்பிறப்பின் நிலைகளை நீ அறிந்து கொண்டாய். அதேபோல் பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகளை கேட்டால், அவனுக்கு ஏற்பட்ட அகால மரணத்திற்கு அவன் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை நீயும் புரிந்து கொள்வாய் என்று கூறி பாண்டியனுடைய சிறப்புகளை எடுத்துக் கூற துவங்கினாள் மதுராபதி.
இப்பொழுது பாண்டியனின் சிறப்புகளை பற்றி கூற, அதைக் கேட்கும் மனநிலையிலும் கண்ணகி இருந்தாள். ஏனென்றால் தன் கணவனின் முற்பிறப்பு சாபம் தானே அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்தவுடன், அவள் மனதில் இருந்த அளவுக்கு அதிகமான கோபமும் குறைந்தது அல்லவா! அதனால் பாண்டியனின் சிறப்புகள் என்ன? என்பதையும் அவள் அறிந்து கொள்ள முற்பட்டாள்.
சஞ்சலம் நீங்கியவன்:
இளம் நங்கையே! பாண்டியன் இந்த பிறப்பில் எந்த ஒரு தவறும் செய்யாதவன், நெறி தவறாமல் வாழ்ந்து வந்தவன்.
கட்டுடல் கொண்ட அழகிய பெண்கள் காம இச்சைகளை தூண்டும் பொழுது, தவம் மேற்கொள்ளக்கூடிய முனிவர்கள் கூட அதில் இருந்து வெளிப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆனால் பாண்டியர்கள் அந்த சூழ்நிலையையும் வென்றவர்கள். அவர்கள் தங்களுடைய மனதை அலைய விடமாட்டார்கள். தன்னால் முடிந்த அளவு நன்மைகளை செய்து வாழ்ந்து வந்தவர்கள். ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவமளித்து உயர்வாக இருந்தவர்கள்.




