மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இன்று காலை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்ற காரணத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் அங்கிருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரிய நிலையில் அதற்கு அங்கிருந்தவர்கள் தம்மால் செல்லமுடியாது எனவும் தெரிவித்தனர்.
தற்போது கொரோனா தாக்கம் அதிகமாகவுள்ளதனால் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதன்போது அங்குவந்த புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார, வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் அனுமதிபெறப்படவேண்டும் எனவும் அவ்வாறு அனுமதிபெறப்படாமல் எந்த ஒன்றுகூடலும் நடாத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் அரசியல்வாதிகள் பல்வேறு நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் செய்யும்போது அங்கு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நீங்கள் எங்களிடம் வந்து இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் கவலைக்குரியது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டாளர் இதன்போது வாதாடினார்.

கடந்த காலத்தில் செங்கலடி பகுதியில் நாங்கள் சுகாதார துறையிடம் அனுமதிபெற்று கவன ஈர்ப்பு போராட்டம் செய்தபோது தாங்கள் துரத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக மீண்டும் ஒரு தடவை அந்த தவறை தாங்கள் செய்ய விரும்பாத காரணத்தினாலேயே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதிபெறவில்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன்,மக்கள் தங்களது போராட்டத்தினை முன்னெடுக்கமுடியும் எனவும் செல்வா சிலையருகே போராட்டத்தினை நடாத்துமாறு கூறிச்சென்றார்.
தமது உத்தரவினை மீறி நீங்கள் ஒன்றுகூடினால் உங்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவேன் என சுகாதார வைத்திய அதிகாரி மிரட்டியபோதிலும் நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை நடாத்தியே தீருவோம் என்று கூறி அங்கிருந்து சென்று தந்தை செல்வா நினைவு பூங்கா அருகே போராட்டம் நடாத்தப்பட்டது.