
2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்து உள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும், அன்றைய தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்து உள்ளது.
புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்து உள்ளன.
இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்து உள்ளன.

இதையடுத்து, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்காளதேசத்தில் 9,236, காங்கோவில் 8,640 குழந்தைகள் பிறந்து இருக்கின்றன.
இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டு உள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்து உள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா போர் தெரிவித்து உள்ளார்.

2021-ம் ஆண்டு யுனிசெப் அமைப்பின் 75-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.