வழியறிதல் :

வந்திருந்தவர் யான் பாண்டிய நாட்டை சார்ந்தவன் என்றும், குடகு மலையில் உள்ள மாங்காட்டில் வசித்து வருகின்றவன் என்று கூறினார். யான் இப்பொழுது திருவரங்கத்தில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தோற்றத்தை காண்பதற்காகவும், திருவேங்கடத்தில் அதே பெருமாள் நின்று கொண்டிருக்கும் அழகினை காண்பதற்காகவும் புறப்பட்டு செல்கிறேன் என்றும் கூறினார்.
பின்பு கோவலனை பார்த்து, ஆமாம்! நீங்கள் எல்லாம் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று வழிப்போக்கன் வினவினான்.
வழிப்போக்கன் கூறிய கூற்றுகளில் இருந்து இவர் பல ஊர்களுக்கு சென்று வந்தவர் என்பதை தெளிவாக புரிந்து கொண்டான் கோவலன். அவரிடம் நாங்கள் மதுரைக்கு செல்ல இருக்கின்றோம். எந்த வழியில் சென்றால் மதுரைக்கு செல்ல முடியும்? என்பது உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு கூறுங்கள் ஐயா! என்று கூறினான்.
வழிப்போக்கன் அவர்கள் மூவரையும் மேலும் கீழுமாக ஒரு முறை பார்த்து விட்டு, முதியவரோடு இளம் தம்பதிகளாக நீங்கள் வந்திருக்கின்றீர்கள். கடும் வெயில் காலத்தில் பாலை நிலத்தில் நடந்து செல்வது இவர்களுக்கு கடினமாக இருக்காதா? என்று வினவினார்.
காட்சியும், நோக்கமும் :
ஐயா! நீங்கள் எங்களை விட வயதில் மூத்தவர். இதே வெயிலில் நீங்களும் நடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா? என்பது போல கோவலன் வினவினான்.
இல்லை மகனே. இல்லை! வழிநெடுகிலும் என் எண்ணமானது திருமாளிடத்திலே லயம் கொண்டிருந்தது. எனவே, இவை என் பயணங்களில் இருந்த களைப்பை போக்கிவிட்டது என்று கூறினார்.
ஐயா! நாங்களும் அதைப்போல தான். எங்களுடைய எண்ணம் ஒரு உயர்ந்த நோக்கத்தைக் கொண்டது. அந்த எண்ணம் எங்களை வழிநடத்தி சென்று கொண்டிருக்கின்றது. அதனால் எங்களுக்கு எந்த ஒரு இன்னலோ, சிரமமோ தெரியவில்லை! என்று கோவலன் கூறினான்.
வழிகளும், முடிவும் :
கோவலனுடைய கூற்றுகளில் இருந்து வழிப்போக்கன் தெளிவாக புரிந்து கொண்டார் அவனின் நாவன்மை பற்றி. உங்களுடைய எண்ணம் சித்தமடைய வேங்கடத்தில் குடிகொண்டிருக்கக்கூடிய பெருமாள் அருளட்டும் என்று கூறிக்கொண்டே, மதுரைக்கு செல்வதற்கு உண்டான வழியை நான் கூறுகின்றேன். ஆனால் நான் கூறும் வழிகளில் எது உங்களுக்கு உகந்தது? என்று தேர்ந்தெடுப்பது உங்களின் விருப்பம் தான் என்றார்.
அப்படி என்றால் மதுரைக்கு செல்வதற்கு பல வழிகள் இருக்கின்றதா? சரி செல்வதற்கான வழியை கூறுங்கள்.. நாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்.. என்றான் கோவலன்.
வழிப்போக்கன், மதுரைக்கு செல்வதற்கு பல வழிகள் இருக்கின்றது என்று கூறினார்.
சரி.. செல்வதற்கான வழியை கூறுங்கள்.. என்றான் கோவலன்.
நீங்கள் பயணம் செய்யப் போகும் பகுதியோ குறிஞ்சி, முல்லையும் சேர்ந்த பகுதியாக இல்லாமல் பாலை பகுதியாக இருக்கும். அதாவது, இந்த நெடும் வழியை கடந்து சென்றால் கொடும்பாளூர் என்னும் ஊர் வரும். அந்த ஊரில் நெடுங்குளம் ஒன்று உள்ளது. அந்த குளம் ஊர் மக்களுக்கு பொதுவான ஒன்றாகும். அங்கு சென்றால் சிவன் ஏந்தி நிற்கும் சூலாயுதத்தை போல, குளத்தின் கரைப்பகுதியில் மூன்று விதமான வழிகள் செல்லும் என்று கூறினார்.
மூன்று வழிகள் :
என்னது மூன்று விதமான வழிகளா? அப்படியானால் எது மதுரைக்கு செல்ல வேண்டிய பாதை? என்றான் கோவலன்.
அந்த மூன்று பாதைகளும் மதுரைக்கு செல்லக்கூடிய பாதைகள் தான். ஆனால், அந்த மூன்று பாதைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், மாறுபட்டதாகவும் இருக்கும்.
என்ன ஒன்றுக்கொன்று மாறுபட்டதா? அதில் என்ன வேறுபாடுகள் இருக்கின்றது? என்றான் கோவலன்.
வலப்புற வழி பாதை :
வலது புறம் உள்ள பாதை பெரும்பாலும் காட்டுப்பாதையாக இருக்கும். அங்கு மூங்கில் மரங்களும், வாகை மரங்களும், கடம்ப மரங்களும் நிறைந்திருக்கும். அந்த வழியில் மான்கள் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அந்த வனத்தில் எயினர் சிலர் குடியிருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை கடந்து சென்றால், மெல்லும் கரும்பும், தினையும், வரகும், மஞ்சளும் மற்றும் வாழை, மா, பலா சூழ்ந்த தென்னவன் என்னும் சிறுமலை தோன்றும். அந்த மலையை வலமாக கடந்து சென்றால் மதுரையை அடையலாம் என்று கூறினார்.
நீங்கள் கூறியதில் முதல் வழியான இந்த வழி எளிமையாக இருக்கிறது. இந்த வழியாக சென்று விடலாமே! என்றான் கோவலன்.
உலகம் அறியா இளைஞனாக இருக்கின்றாயே? நான் கூறிய வழியில் இருக்கக்கூடிய மறைப்பொருளை உணர்ந்து கொள்ளவில்லையா? எங்கெல்லாம் மூங்கில்கள் அதிகமாக வளர்கின்றதோ? அங்கு நிலம் நீரை வெகுவாக உறிஞ்சிக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய குளங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள நீரானது விரைவாக வற்றத் துவங்கிவிடும். அதன் பொருட்டுத்தானே நான் அந்த வழியில் நீருக்காக மான்கள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டு இருக்கும் என்று கூறினேன்..
எயினர்கள் அங்கு குடியிருக்கின்றார்கள் என்று கூறினேன் அல்லவா! அவர்கள் காட்டில் இருக்கக்கூடிய மிருகங்களை மட்டும் வேட்டையாடுபவர்கள் அல்ல. வழிப்பறி கொள்ளைகளிலும் ஈடுபடுவதாக செய்திகள் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர்கள் நாகர் இனத்தை சேர்ந்த காட்டுவாசிகள் ஆவர்.
சரி.. அப்படி என்றால் இடது புற வழி எப்படி இருக்கும்? அதுவும் இன்னல்கள் நிறைந்ததா? என்று கோவலன் வினவினான்.
இடது புற வழி :
கோவலன், இடது புற வழி எப்படி இருக்கும்? அதுவும் இன்னல்கள் நிறைந்ததா? என்று வழிபோக்கனிடம் வினவினான்.
இன்னல்கள் ஏதும் நிறைந்திருக்காது. வளமையும், கேள்வியும் நிறைந்திருக்கும்.
என்னது கேள்வியா? வழியில் கேள்வியும் இருக்கின்றதா? என்று கோவலன் கேட்டான்.
ஆமாம்… ஆமாம்… கேள்விக்கு சரியான பதில் கூறினால்தானே வழி பிறக்கும். இடது புறமாக இருக்கக்கூடிய அந்த வழி, வலது புறமாக இருக்கும் வழியை விட மேன்மை கொண்டது தான். ஏனென்றால் அங்கு குளங்களும், வயல்களும், பூஞ்சோலைகளும் நிறைந்திருக்கும். அந்த பூஞ்சோலைகள் வழியாக சென்றால் திருமால் குன்றம் என்கின்ற மலையருகே சென்றடைவீர்கள். அந்த மலையின் அருகே மூன்று விதமான பொய்கைகள் இருக்கக்கூடிய வழிகளும் இருக்கின்றன. அதாவது புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி என்று அழைக்கப்படுகின்ற மூன்று பொய்கைகளையும் அந்த வழியில் செல்லும் பொழுது உங்களால் காண முடியும்.
பெண் தெய்வம் :
அந்த மூன்று பொய்கையில் ஒன்றான புண்ணிய சரவண பொய்கையில் நீராடினால், இந்திரன் எழுதிய ஐந்திரம் என்னும் இலக்கணத்தை முழுமையாக அறிந்து கொண்ட அறிவினை பெறுவீர்கள்.
அடுத்து இருக்கக்கூடிய பவ காரணி என்னும் பொய்கையில் நீராடினால், இந்த பிறப்பினை எடுப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய முன் ஜென்ம கர்மாக்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அடுத்து இருக்கக்கூடிய மூன்றாவது பொய்கையான இட்ட சித்தியில் நீராடினால், நீங்கள் விரும்பக்கூடிய அனைத்து பொருட்களையும் பெறுவதற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
நான் கூறிய இந்த மூன்று பொய்கையில் ஏதேனும் ஒன்றில் குளிக்க விரும்பினால், திருமால் குன்றத்தில் நின்று அருள் புரியும் திருமாலை முதலில் வணங்க வேண்டும். பின்பு அவரை துதித்து மலையை மும்முறை வலம் வந்தால் அங்கே சிலம்பாற்றங் கரையில் மலர் பூத்த வேங்கை மர நிழலில், பெண் தெய்வம் ஒன்று பூமியை பிளந்து கொண்டு தோன்றும்.
கேள்விகள் :
தோன்றிய அந்தப் பெண் தெய்வம் உங்களிடத்தில் மூன்று கேள்விகளை கேட்கும். அதாவது இம்மைக்கு இன்பம் தருவது எது? மறுமைக்கு இன்பம் தருவது எது? இம்மைக்கும், மறுமைக்கும் அல்லாமல் எப்பொழுதும் நிலைத்திருந்து இன்பம் தரக்கூடியது எது? என்பது அந்தக் கேள்வியாக இருக்கும். இந்த கேள்விகளுக்கு சரியான விடை தந்தால் மட்டுமே! நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு உண்டான தக்க வழியை அந்த தெய்வம் காட்டுவாள். ஏனென்றால், அவள் அந்த மலையில் எப்பொழுதும் நிலைத்து வாழக் கூடியவள். அங்கு வாழக்கூடியவர்கள் அவளை “மலைச் செல்வி” என்று கூறுவார்கள்.
ஒட்டுக்கதவும், பேரழகியும் :
பெண் தெய்வம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடை தந்தால் மட்டுமே! நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு உண்டான தக்க வழியை அந்த தெய்வம் காட்டுவாள்.
அந்த வழியில் செல்வதற்கு யாருக்கு தகுதி இருக்கின்றதோ? அவர்களுக்கு மட்டுமே! அந்த வழியில் உள்ள கதவுகளை திறந்து விடுவாள். அந்த வழியும் சிறு தூர வழியாக இருக்காது. அது பல கதவுகளை கொண்ட ஒரு நெடிய வழியாகும். இறுதியில் ஒட்டுக் கதவு ஒன்று இருக்கும். ஒட்டுக் கதவு என்றால் இரண்டு கதவுகள் ஒட்டிய நிலையில் இருக்கக் கூடியதாகும்.
அந்த கதவு உள்ளே காண்பதற்கு சித்திரத்தில் இருக்கக்கூடிய அழகிய பதுமை போல வளமையும், சீர்மையும் கொண்ட ஒரு பெண் தோன்றுவாள். அவள் உங்களிடத்தில் ஒரு கேள்வியை கேட்பாள். அதாவது, அழிவே இல்லாத பேரின்பம் எது? என்பது அந்த கேள்வியாகும். அந்த கேள்விக்கு உண்டான விடையை கூற வேண்டும் என்று கூறுவாள். ஒருவேளை அதற்கு உண்டான விடையை கூற மறுத்தாலும் அல்லது தவறான விடையை கூறினாலும், அவள் உங்களுக்கு எந்த விதமான துன்பத்தையும் விளைவிக்க மாட்டாள். மாறாக நீங்கள் செல்வதற்கு உண்டான நெடு வழியை காட்டுவாள்.
வசமாகும் பேறுகள் :
ஒருவேளை நீங்கள் சரியான விடையை கூறிவிட்டீர்கள் என்றால், அவள் மீண்டும் அந்த மூன்று பொய்கைகளுக்கு அழைத்துச் சென்று உங்களை அங்கு விட்டுவிட்டு மீண்டும் திரும்பி வந்து விடுவாள். பஞ்சாட்சர மந்திரத்தையும், அஷ்டோத்திர மந்திரத்தையும் உச்சரித்துக்கொண்டு விருப்பமான பொய்கையில் எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் முழுகினால் விரும்பிய பேறுகள் அனைத்தும் கிடைக்கும். இதை நான் கண்கூடாக அனுபவித்த அனுபவமும் கூட. நம்பி செல்லலாம் என்று கூறினார்.
திருமாலை நினைத்து கொண்டே வழிபட, கருட கொடியுடைய தூண் ஒன்று தோன்றும். வழிபட்டு திருமாலுடைய திருவருள் பெற்றபின் நீங்கள் எந்த விதமான இடையூறும் இல்லாமல் மதுரையை எளிமையாக அடையலாம் என்று கூறினார்.
மூன்றாவது வழி :
இடது வழி பயணத்திலும் பல திருப்பங்கள் இருக்கின்றது. சரி.. இப்போது மூன்றாவது வழி பயணம் எப்படி இருக்கும்? என்று கூறுங்கள் என்றான் கோவலன்.
முன்னே கூறிய இரண்டு வழி பாதைகள் போல மிகக் கடுமையாக இந்த வழி பாதை இருக்காது. காண்பதற்கு மிகவும் வளமையும், செழுமையும் நிறைந்த சோலைகள் மிக்க ஊர்களின் வழியாக சென்று, காடுகள் பல கடந்த பின்பு ஒரு அரிய வழி ஒன்று தென்படும். அந்த வழி பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். அங்கே கானுறை தெய்வம் ஒன்று உங்களை மேற்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும். அந்த தெய்வத்தை கண்டு நீங்கள் எந்த விதமான அச்சமும் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் அது சாதாரண ரூபத்துடன் காட்சி அளிக்கும். எந்த விதமான பயத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் பயணம் மேற்கொள்பவர்களை மட்டும் நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.
அந்த தெய்வத்திடம் இருந்து தப்பித்து செல்வதற்கான வழிமுறைகளை அறிந்து நடந்து கொண்டால், எந்த விதமான இடையூறும் இல்லாமல் நீங்கள் உங்களது பயணத்தை மேற்கொள்ள முடியும். இது ஒன்று தான் அந்த வழியில் இருக்கக்கூடிய இடையூறு ஆகும். அந்த இடையூறையும் கடந்து சென்று விட்டீர்கள் என்றால் மூன்று வழிகளும் சந்திக்கக்கூடிய மதுரை பெரு வழியை எளிமையாக அடைந்து விடலாம். பின் நீங்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மதுரைக்கு செல்லலாம் என்று கூறினார்.




