அட்லீ இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய், கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சென்னையில் உள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அடுத்து சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற உள்ளது. அங்கு சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை அப்படியே செட் அமைத்து உருவாக்கி வருகிறார்கள். இரவு பகலாக அதற்கான பணி நடந்து வருகிறது. பார்ப்பதற்கு நிஜ நேப்பியர் பாலத்தைப் பார்ப்பது போன்றே உள்ளது. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பு நடப்பது வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘விஸ்வாசம்’ படம் கூட ஐதராபாத்தில்தான் அதிகம் படமாக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகம் நடைபெறுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் நடந்தால் அந்த மாநிலத் தொழிலாளர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும்.