மலையாள திரையுலகில் பிரபல இயக்குனரான வினயனுக்கும் நடிகர் மோகன்லாலுக்கும் பல வருடங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மோகன்லாலை மறைமுகமாக தாக்கி பேட்டி கொடுத்து வந்தார் இயக்குனர் வினயன். ஆனால் எதிர்பாராத திருப்பமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லாலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய இயக்குனர் வினயன் தாங்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அடுத்தநாளே ஒரு தகவலை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்தார்.
இயக்குனர் வினயனுக்கு ராவணனின் கதாபாத்திரத்தை ஹீரோயிச கதாபாத்திரமாக உருவகப்படுத்தி ஒரு சமூக படம் ஒன்றை இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த கதாபாத்திரத்திற்கு மோகன்லால் தான் சரியான நபர் என்பதாலேயே அவருடனான தனது பிணக்குகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குனர் வினயன்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் ராவணன் உருவத்துடன் மோகன்லால் இருபது போன்ற ஒரு பெயிண்டிங் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் மோகன்லாலை மீண்டும் சந்தித்து கதையை இறுதி செய்தவுடன் முறையான அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம் இயக்குனர் வினயன்.