சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் மொழி இலக்கியம்

கவுந்தி அடிகளின் பேச்சுக்களும்.. கோவலனின் அதிர்ச்சியும்..!!

தேனினும் இனிது :

 கவுந்தி அடிகளார், நீண்ட நாட்களாக தென் தமிழகத்தில் உள்ள மதுரைக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு இருக்கக்கூடிய சமண முனிவர்களிடம் சமண நெறி பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் கொண்டிருந்தார். இவர்கள் தனித்து செல்வது சரியாக இருக்காது என்று எண்ணிய அடிகளார், தானும் உங்களோடு வழி துணையாக வருகின்றேன். நீண்ட நாட்களாக மதுரைக்கு செல்ல வேண்டும் என்ற என்னுடைய எண்ணம், இப்பொழுது உங்கள் மூலமாக நிறைவேற இருக்கிறது என்று கூறினார்.

 அடிகளார் தம்முடன் வருகின்றார் என்பதை கேட்டதும் கோவலனுக்கும், கண்ணகிக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தேனினும் இனிதாக அச்சொற்கள் அவர்களுக்கு இருந்தது. இது எங்களுடைய பாக்கியம். இதைக் கேட்கும் பொழுது எங்களுக்கு வழி பயணத்தில் எந்தவித தடையும் இருக்காது என்ற நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுகின்றது என்று ஒரே நேரத்தில் இருவரும் கூறினார்கள்.

அடிகளாரும் சரி நாம் சிறிது நேரத்தில் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறிவிட்டு மூவரும் ஒரு சேர புறப்பட்டார்கள் மதுரையை நோக்கி..

உரையும், வழிப்பாதையும் :

 அடிகளார் வயதிலும், அறிவிலும் முதிர்ந்தவர். அவர் மதுரையைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மதுரைக்கு செல்ல வேண்டிய பாதைக்கு உண்டான வழியையும் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். எங்கு செல்வதாக இருந்தாலும் நடை பயணத்தின் மூலமாக செல்லக்கூடியவர்கள், பயணத்தின் வழியை நன்முறையில் நினைவில் கொண்டிருப்பார்கள்.

 பயணத்தின் போது எந்தவிதமான களைப்பும், சோர்வும் ஏற்படக் கூடாது என்பதற்காக அடிகளார் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்தார். இவருடைய பேச்சினால் கோவலன் மற்றும் கண்ணகியின் பயணத்தில் இருந்த களைப்பும் அவர்களுக்கு தெரியவில்லை.

வழியும், இடர்களும் :

 இப்பொழுது மதுரைக்கு செல்வதற்கு இரண்டு விதமான வழிகள் இருக்கின்றது. ஒரு வழி என்பது வயல் வழியாக செல்வது. மற்றொரு வழி என்பது சோலை வழியாக செல்வது. இந்த இரண்டு வழிகளிலும் தடைகள் என்பது இருப்பது பொதுவானதாகும். இதில் எந்த வழியாக செல்வோம் என்று கேட்டார் கவுந்தி அடிகளார்.

 வெயிலினால் ஏற்படப் போகும் கொடுமையும், தாக்கத்தையும் ஓரளவு குறைத்துக் கொள்ள சோலையின் வழியாக செல்வது எளிதாக இருக்கும் என்று கோவலன் கூறினான். அதுமட்டுமல்லாது அங்கு தடைகள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றான் கோவலன்.

 சோலைகளில் துன்பம் இருக்காது என்று யார் சொன்னது? சோலைகளில் உள்ள கிழங்குகளை வெளியே எடுத்த பின்பு அதனால் உண்டான குழிகள் நிறைய இருக்கும் என்றார் கவுந்தி அடிகள்.

 நாம் செல்லும் பாதையில் குழிகள் இருப்பது தெரிந்த பின்பு, அதை விட்டு விலகி சென்று விடுவோம் என்றான் கோவலன்.


இன்பமே துன்பத்தின் வழி :

 கவுந்தி அடிகள், நாம் செல்லும் வழியில் குழிகளும், இடர்களும் இருப்பது தெரிந்தால் தானே விலகி செல்ல முடியும். இருப்பதே தெரியவில்லை? என்றால்…

 அது எப்படி தெரியாமல் போகும்? மண்ணை எடுத்த பின்பு குழிகள் இருப்பது நமக்குத் தெரியும் அல்லவா! என்றான்.

 தெரியாது மகனே! நாம் செல்வது சோலை வழியாக. அங்கு செண்பக பூக்கள் நிறைய மலர்ந்திருக்கும். மலர்ந்த மலர்களும் ஒரு நாள் உதிரத் தானே வேண்டும். அவ்வாறு உதிர்ந்த பூக்கள் குழிகளில் விழுந்து குழிகளை நிறைத்து மறைத்திருக்கும். செல்லும் வழியெங்கும் பூக்கள் தானே! என்று நாம் செல்ல துவங்கினால் குழிகளில் மறைந்திருந்த பூக்களினால் நாம் தடுமாறி கீழே விழவும் செய்யலாம். நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையும் அப்படித்தான். துன்பங்கள் எதுவும் நம்மை நேராக அணுக முடியாது. ஆனால் நாம் எதை விரும்புகின்றோமோ! அதன் வழியாகத் தான் நாம் துன்பத்தை அனுபவிக்க போகின்றோம் என்று கூறினார்.

 வாழ்க்கையின் நிதர்சன உண்மையை ஒரு சிறு உதாரணம் மூலம், யாவரும் எளிதில் புரியும் வண்ணமாக எடுத்துக் கூறியதை கேட்ட கண்ணகியும் வியந்தாள். மேலும் அவருடைய பேச்சுக்களை கேட்பதில் இருவரும் கவனமாக இருந்தார்கள்.

 ஒருவேளை குழிகளில் நீ கவனமாக இருந்து குனிந்து நடக்கின்றாய் என்றால், பழுத்து தொங்கும் பலாப்பழங்கள் எல்லாம் நெற்றியில் இடிக்குமே. இனிமை நிறைந்த சில விஷயங்கள் கூட சில நேரங்களில், நம் தலையில் இடி விழுந்தார் போல பல விஷயங்களை உணர்த்தும்.

 இதைக் கேட்டதும் கோவலன் மிகுந்த ஆச்சரியமும், வியப்பும் கொண்டான். கவுந்தி அடிகளார் எப்பொழுதும் போல இயற்கையாக பேசுகின்றாரா? அல்லது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அறிந்து பேசுகின்றாரா? அதாவது மாதவியின் அழகில் மதிமயங்கி இன்புற்று தவறான வழியில் சென்று இருந்ததை இப்பொழுது அவர் எடுத்துரைக்கின்றாரா? அவளுடைய நடவடிக்கையில் இருந்து யாரும் கற்றுத் தராத ஒரு பாடத்தை இவர் மறைமுகமாக குறிப்பிடுகின்றாரோ? என்று எண்ணிக் கொண்டே இருந்தான்.

 கவுந்தி அடிகளார் மேலும் தன்னுடைய பேச்சுக்களை தொடர்ந்தார். அதாவது பூக்கள் நிறைந்த குழியில் இருந்தும், நெற்றியில் இடிக்கும் பலாப்பழங்களை கவனித்துக் கொண்டே நாம் நடந்தாலும், கனிந்த பலா சுலையில் இருந்து விழுந்த கொட்டைகள் நம்முடைய கால்களை உறுத்தும். துன்பங்கள் என்பது எண்ணற்ற வகையாக இருக்கின்றன. அவைகள் தொடர்ந்து வருவதற்கு இன்பமும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது அல்லவா! என்றார்.


இடரில்லா பாதை :

 கோவலன், நாம் சோலை வழியாக செல்வதற்கு பதிலாக, வயல்வெளியில் நடந்து சென்றால் என்ன? அங்கு ஏதாவது இடர்கள் இருக்கிறதா? என்று கவுந்தி அடிகளிடம் வினவினான்.

 இடர்கள் இல்லாத பயணம் என்று எதுவும் இல்லை. அதன் தன்மைகள் மட்டுமே வேறுபடும். உயிர்களின் தாகத்தை தணிக்கும் நீருக்கே பயணத்தின் வழியில் பலவிதமான ஏற்ற, இறக்கங்களும், தடைகளும் இருக்கும் பொழுது அதை குடித்து வாழும் மனிதர்களுக்கு ஏன் இருக்காது.

வாளையும், பொய்கையும் :

 வயல் நிறைந்த பகுதியிலும் இடர்கள் நிரம்பி தான் இருக்கின்றன. அங்கே குவளைகள் பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளும் இருக்கின்றன. அவற்றில் உள்ள வாளைமீனை உண்பதற்காக நீர் நாய்கள் வரும். அவற்றிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அவ்வாளை மீன்கள் நடக்கும் பாதையில் துள்ளி விழுந்து விடும். ஒரு வேளை அதை கண்ணகி பார்த்தால் ஒருவிதமான அச்சம் அவளுடைய மனதில் ஏற்படுவதற்கான சூழ்நிலையும் உருவாகும்.

 அடுத்து இருப்பது கரும்புகள் நிறைந்த பகுதியாகும். அங்கு விளைந்த கரும்பில் இருந்து உருவான தேன் சாறு போன்ற பாலானது அதற்கு அருகில் இருக்கக்கூடிய பொய்கையை (பொய்கை என்பது மனிதர்களின் உழைப்பின்றி இயற்கையாக உருவாகும் நீர்நிலையாகும்) வந்து சேரும். பார்ப்பதற்கு நாம் அருந்தும் நீர் போல தான் இருக்கும். ஆனால் அது கரும்பின் சாறு அல்லவா! ஒருவேளை அதை அறியாது யாரேனும் அருந்தினால் அது மயக்கத்தை தந்துவிடும் என்று அடுத்த இடரையும் கூறினார்.

வண்டும், துன்பமும் :

 அதுமட்டுமல்லாமல் அங்குள்ள கருவிளை மலர்களை பறிப்பார்கள். களைப்பறித்த அவற்றை வயல் வழி பாதையில் போடுவார்கள். அந்த கருவிளை மலர்களில் வண்டுகள் எல்லாம் மொய்த்து அவ்விடத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். எதற்கும் பயன்படாத கருவிளை மலர்தானே என்று நாம் காலை அதன் மேல் வைத்தால் அதன் உள்ளே இருக்கும் வண்டுகளும் நசுங்கி வருந்தும் அல்லவா! நம்முடைய பயணம் ஒரு உயிரின் துன்பத்திற்கு காரணமாகிறது அல்லவா! என்றார். இவ்விதமாக வயல் வழியில் இருக்கக்கூடிய குறைகளை ஒவ்வொன்றாக அவர் கூறிக் கொண்டே வந்தார்.

 உலகத்தில் இருக்கக்கூடிய உயிரினங்கள் எதற்கும் எந்த ஒரு துன்பமும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டவர்கள் சமண துறவிகள். பொதுவாக அவர்கள் பயணங்களின் போது பெட்டி படுக்கையோ, உணவையோ எடுத்துச் செல்வதில்லை.

 மாறாக தோளில் தொங்கவிட்ட உரியும், அதில் சோறு உண்பதற்காக ஒரு பிச்சைப் பாத்திரத்தையும், கையில் ஒரு மயில் தோகை அதாவது உயிர்களுக்கு துன்பங்கள் நிகழாத படி மயில் தோகையை வைத்திருப்பார்கள். இவற்றை ஏந்திய வண்ணமாக எதன் வழியாக செல்வது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்? என்று அவர்களோடு கவுந்தி அடிகள் பேசிக்கொண்டே வந்தார்.


களிப்பும், களைப்பும் :

 காவிரி கரையின் வாயிலாக மூவரும் பேசிக் கொண்டே பயணம் மேற்கொண்டனர். அந்த பயணத்தில் அவர்கள் கண்ட காட்சியும், ஓசைகளும் அவர்களுடைய மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.

 பசுமை மிகுந்த வயல்களும், உழவர்கள் எழுப்பிய ஒலியும், காவிரி நீரின் இடைவிடாத இசையும் அவர்களுடைய மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்தக் காட்சிகள் அனைத்தும் அவர்களுடைய பயணத்திலிருந்த களைப்புகள் அனைத்தையும் கலைப்பது போல அமைந்திருந்தது.

மூவகை பாடல்கள் :

 பயணம் மேற்கொண்ட வழியில் உழவர்கள் மண்ணை உழுகின்ற கலப்பையை பூஜித்து விட்டு, அந்த கலப்பையினால் உருவாகப் போகும் மகிழ்ச்சியினால் பாடிய பாடலான “ஏர் மங்களம்” பாடலும், நெல்லை முறம் கொண்டு தூற்றிய போது பாடக்கூடிய பாடலான “முகவை” பாடலும், கிணைப் பொருநர் முழவு கொண்டு எழுப்பிய “கிணை இசை” பாடல் (கிணை – ஒரு வகை பறை. பாணர்குடியில் பிறந்த பெண்கள் வாசிப்பார்கள். அவர்கள் கிணை மகள் என்று அழைக்கப்படுவார்கள்) என மூன்று விதமான பாடல்களை கேட்டுக் கொண்டே, வழிநடையில் எந்த வருத்தமும் தெரியாத அளவுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

 அவர்கள் வழியில் பல ஊர்களை கடந்து சென்றார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே அவர்களால் கடக்க முடிந்தது. இருள் சூழ்ந்த பொழுது ஆங்காங்கே இருக்கக்கூடிய சோலைகளில் தங்கி ஓய்வு பெற்றனர்.

 நாட்களும் பல கடந்தன. அவர்களும் பல ஊர்களை கடந்து திருவரங்கத்தை அடுத்து இருக்கக்கூடிய ஒரு சோலையில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.

சிலாதலம் வருதல் :

 அவர்கள் பயணம் தொடர்ந்து சில மணிநேரம் கடந்த பின்பு, அவர்களுக்கு எதிரில் சாரணர்கள் சிலர் தென்பட்டார்கள். அவர்களால் அமைக்கப்பட்டிருந்த சிலாதலம் ஒன்று இருந்தது. அங்கு அறிவும், ஞானமும் மிக்க சமணர்கள் பலர் தங்கி இருந்தார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட மக்களை சாரணர்கள் என்றே அழைப்பார்கள்.

 சமண மதத்தில் இல்லறத்தில் இருக்கக்கூடியவர்களை சாவகர்கள் என்றும், இல்லறத்தை விடுத்து துறவறம் மேற்கொண்டவர்களை சாரணர்கள் என்றும் அழைப்பார்கள்.

 அவர்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கவுந்தி அடிகளிடமிருந்து அறிந்து கொண்ட கோவலனும், கண்ணகியும் அமைதி கொண்டனர்.

Recent posts

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியின் மேற்பரப்பில் நாம் காணும் கடல்கள், ஆறுகள், ஏரிகள் அனைத்தும் சேர்ந்ததை விட பல மடங்கு அதிகமான நீர் நம் காலடிக்கு அடியில், சுமார் 400 முதல் 660 கிலோமீட்டர்...
Thamil Paarvai

உலகின் கையிருப்பு நாணயம் மாறுகிறதா? டாலர் ஆட்சிக்கு ஆபத்தா?

ஆம், உலகின் நாணய முறைமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க டாலரின் நிலை சவால்களை எதிர்கொண்டாலும், அதன் ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வரும் நிலை...
Thamil Paarvai

உலகின் முக்கிய நீரிணைகளின் வரலாறு

நீரிணைகள் வெறும் நீர்ப் பரப்புகள் மட்டுமல்ல; அவை உலக வர்த்தகத்தின் நாடிகள், பேரரசுகளின் போர்க்களங்கள், மற்றும் நாகரிகங்களின் சந்திப்பிடங்களாக விளங்குகின்றன. உலகின் மிக முக்கியமான மூன்று நீரிணைகளின்...
Thamil Paarvai

இன்றைய உலக நாணயங்கள்: பாரம்பரிய நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் நாணயங்கள்

உலக நாணய உலகம் இன்று இரு முக்கிய முகங்களைக் கொண்டுள்ளது: ஒருபுறம் நாடுகளின் பாரம்பரிய நாணயங்கள், மறுபுறம் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயங்கள். 2026-ம் ஆண்டின்...
Thamil Paarvai

பன்முக நாணய முறைமை (Multipolar Currency System) – ஒரு விரிவான பார்வை

பன்முக நாணய முறைமை என்பது உலகப் பொருளாதாரத்தில் ஒரு சக்திவாய்ந்த நாணயம் (தற்போதைய அமெரிக்க டாலர்) மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல், பல முக்கிய நாணயங்கள் சமமாகவோ அல்லது போட்டியிட்டோ...
Thamil Paarvai

பிரிக்ஸ் நாணயம்: உண்மையில் என்ன நடக்கிறது?

பிரிக்ஸ் (BRICS) நாடுகள் ஒரு புதிய பொதுவான நாணயத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், 2026-ம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, “பிரிக்ஸ் நாணயம்” என்ற...
Thamil Paarvai

சீன நாணயத்தின் வரலாறு: கடற்சிப்பிகளில் இருந்து டிஜிட்டல் யுவான் வரை

சீன நாணயத்தின் வரலாறு உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான நாணய வரலாறுகளில் ஒன்றாகும். கடற்சிப்பிகள் (sea shells) பயன்பாட்டில் இருந்த காலம் முதல், இன்றைய டிஜிட்டல் யுவான்...
Thamil Paarvai

ரஷ்ய நாணயத்தின் வரலாறு: ரூபிளின் பயணம்

ரஷ்ய நாணயமான ரூபிள் (Ruble) உலகின் மிகப் பழமையான நாணயங்களில் ஒன்றாகும். இது பிரிட்டிஷ் பவுண்டிற்கு அடுத்தபடியாக இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான நாணயமாகக் கருதப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில்...
Thamil Paarvai

டிஜிட்டல் நாணயங்கள்: ஒரு முழுமையான அறிமுகம்

டிஜிட்டல் நாணயங்கள் இன்று உலக நிதி அமைப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, டிஜிட்டல் நாணய உலகம் மூன்று முக்கிய வகைகளாகப்...
Thamil Paarvai

Leave a Comment