பிரதமர் மோடியின் வாழ்க்கையை தழுவி பிஎம் நரேந்திர மோடி என்ற படம் உருவாகி உள்ளது. மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளனர். ஓமங் குமார் இயக்கி உள்ளார். இப்படம் கடந்தவாரமே வெளியாக வேண்டியது. தற்போது தேர்தல் சமயம் என்பதால் இப்படத்தை வெளியிட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ரிலீஸ் ஏப்.,11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், படத்திற்கு தாங்கள் தடை விதிக்க முடியாது என்றும் கூறி மனுவை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரிலீஸ் வேலைகள் துவங்கின. இப்படத்திற்கு சென்சார் போர்ட் இன்று காலை யு சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தின் ரிலீசை எதிர்த்து தேர்தல் கமிஷனிடமும் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. இதன் காரணமாக மோடி படத்தை நாளை(ஏப்., 12) ரிலீஸ் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை எந்த வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தையும் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவால் பிஎம் நரேந்திர மோடி படம் மட்டுமின்றி ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆரின் வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள லட்மியின் என்டிஆர் உள்ளிட்ட எந்த வாழ்க்கை படங்கள் மற்றும் வரலாற்று படங்களை வெளியிட முடியாது.