கர்நாடக மாநில பாஜ கட்சியில் தூணாக இருந்து கட்சியை தென்மாநிலங்களில் வளர்த்து பலப்படுத்தியவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார். பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 5 முறை இந்த தொகுதியின் எம்பியாக இருந்துள்ளார்.
கடந்தாண்டு உடல்நலக்குறைவால் அனந்த குமார் இறந்த நிலையில், அவரது மனைவி தேஜஸ்வினிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக வருகிற மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி விருப்பம் தெரிவித்தார்.
கர்நாடக பாஜ தலைவர் எடியூரப்பா, தேஜஸ்வினிக்கு சாதகமான பதிலை அளித்ததால் கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளை தேஜஸ்வினி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பாஜ மேலிடம் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 3 கட்டங்களாக வெளியிட்டது.
அதில் பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
கடைசியாக வௌியிட்ட பட்டியலில், பெங்களூரு தெற்கு தொகுதியில், 28 வயதான வழக்கறிஞர் தேஜஸ்வி யாதவ் என்பவருக்கு சீட் ஒதுக்கி பாஜ தலைமை அறிவித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த தேஜஸ்வினி, கட்சி தலைமை தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அனந்த்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எடியூரப்பா, தேஜஸ்வினியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து தேஜஸ்வினி கூறுகையில், ‘தேஜஸ்வியை வேட்பாளராக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் எனது பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
எனது கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். எனது கணவர் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்தார்.
நாடு அவருக்கு முதலாவதாகவும், கட்சி அவருக்கு இரண்டாவதாகவும் இருந்தது. அவர் சுயநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.இப்போது கட்சிக்காக உழைக்க வேண்டியுள்ளது’ என்றார்.