ஆய்வு கட்டுரை மொழி இலக்கியம்

காவி உடைக்குள் ஒரு காவியம்.

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம்.

முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ.

மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும்.

அங்கே ஒரு பௌத்த விகாரை. அதன் பிரதம குரு (விஹாராதிபதி) வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோ.

அவரைப்பார்க்கச்செல்பவர்கள் பெரும்பாலும் அந்தக்கிராமத்திலும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அவர்கள்தான் அந்த பௌத்த பிக்குவுக்கு தினமும் தானம் (மதிய உணவு) முறைவைத்து கொண்டுவந்து கொடுப்பவர்கள்.

தினமும் பகலில் மாத்திரம் ஒரு வேளை உணவுண்டு பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதித்துவந்த அவரைப்பார்க்க அடிக்கடி தமிழ் எழுத்தாளர்களும் சென்றுவந்திருக்கிறார்கள் எனச்சொன்னால் இதனை வாசிக்கும் வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.

அதிசயம்தான். ஆனால் உண்மை.

தனக்கு நாடும் வேண்டாம் அரசுரிமையும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் இல்லறமும் வேண்டாம் என்று வனம்சென்று தவமிருந்து பரிபூரண நிர்வாணம் எய்தி உலகம் பூராவும் அன்பு மார்க்கத்தை போதித்த கௌதம புத்தரின் சிந்தனைகளை பரப்பி பௌத்த மதத்தை இலங்கையில் சேமமாக பரப்பும் ஆயிரக்கணக்கான பிக்குகளில் ஒருவர்தான் இந்த ஆக்கத்தில் நான் குறிப்பிடும் ரத்ணவன்ஸ தேரோ.

பௌத்த பிக்குகள் மத்தியில் இவரை ஆயிரத்தில் ஒருவர் என்றும் குறிப்பிடலாம். காரணம் அரசியலுக்குள் பிரவேசிக்காத ஒரு இலக்கியவாதி. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சிங்களத்தேசியத்திற்காகவும் தனது அரசியல் தேவைகளுக்காகவும் இலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இருக்கவேண்டிய பிக்குகளை அரசியலுக்குள் கொண்டுவந்தார். பின்னர் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுடப்பட்டு இறந்தார் என்பது பழையசெய்தி. அவரது மறைவு வாரிசு அரசியலுக்கும் வித்திட்டது என்பதும் கடந்துபோன செய்தி.

இன்று இலங்கை பாராளுமன்றத்துக்குள் ஹெல உருமய என்ற கட்சியின் பிரதிநிதிகளாக பிக்குகள் காவி உடையுடன் பிரவேசித்திருக்கின்றார்கள். இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பலமான சக்தியாகவும் அவர்கள் விளங்குகிறார்கள்.

இப்பொழுது இலங்கையில் பல பௌத்த பிக்குகள் தமிழ் படிக்கிறார்கள், தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல நாட்டின் முதன்மை அதிபர் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்திருந்தபோதிலும் அவரும் பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்பேசும் மக்கள் முன்னிலையில் தமிழ் பேசுகிறார். இந்த வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர்தான் இங்கு நான் குறிப்பிடும் வண. ரத்னவண்ஸ தேரோ.

1970 களிலேயே தமிழை மாத்திரமல்ல நவீன தமிழ் இலக்கியங்களையும் படித்து தேர்ந்தவர் அவர்.

நான் பிறந்து வளர்ந்த நீர்கொழும்பில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நான் இலக்கியப்பிரவேசம் செய்த 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடக்கியிருந்தேன். இந்த அமைப்புக்கு ரத்னவண்ஸ தேரோவை அறிமுகப்படுத்தியவர் மினுவாங்கொடையைச்சேர்ந்த எழுத்தாளர் நிலாம். ( இவர் தற்பொழுது இலங்கையில் பிரபல நாளேடான தினக்குரலில் பத்திரிகையாளராக பணியாற்றுகிறார்)

எங்களிடமிருந்த நூலகத்திலிருந்து தமிழ் நூல்களையும் இதழ்களையும் வாங்கிச்சென்று படித்து தமது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்ட தேரோ, தமது கொரஸ் கிராமத்திலும் அருகிலிருந்த வியாங்கொடை, மினுவாங்கொடை முதலான நகரங்களிலும் தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை உருவாக்கினார். பல சிங்கள ஆசிரியர்களும் பௌத்த பிக்குகளும் மிகுந்த ஆர்வமுடன் தமிழ் கற்க வந்தார்கள். வாராந்தம் வெள்ளிக்கிழமை மாலையானதும் நான் நீர்கொழும்பிலிருந்து அந்த கொரஸ கிராமத்துக்கு சென்றுவிடுவேன். வெள்ளி, சனி அங்கே விஹாரையில் தங்கியிருந்து தேரோவுடன் பயணித்து அங்கு தமிழ் சொல்லிக்கொடுத்துவந்தேன்.

எனக்கும் அந்த ஊர் கிராமவாசிகளுக்கும் இடையே தோன்றிய நெருக்கத்தையும் வாராந்தம் பௌத்த பிக்குமாருடன் அலைந்து கொண்டிருப்பதையும் பார்த்த எனது பெற்றோருக்கும் சகோதரிகளுக்கும், எங்கே நானும் பௌத்த மதத்தைத்தழுவி துறவியாகிவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.

இந்தப்பயம்பற்றி ஒருநாள் ரத்னவண்ஸதேரோவிடம் வேடிக்கையாகச்சொன்னேன்.

ஒரு தைப்பொங்கல் தினத்தன்று எங்கள் வீட்டுக்கு வந்தவர் எங்களுடன் சேர்ந்து பொங்கலும் கொண்டாடி பெற்றோர் சகோதரங்களின் அர்த்தமற்ற பயத்தையும் போக்கினார்.

பொங்கலும் வடையும் கத்தரிக்காய் குழம்புடன் மதிய உணவும் ரஸித்து சுவைத்துண்ட தேரோவுக்கு அதன் பின்னர் எங்கள் வீட்டிலிருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப்பிடித்தமான கறிவகைகளுடன் உணவு கொண்டு சென்று கொடுத்திருக்கின்றேன்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் அவருக்கு அறிமுகப்படுத்தியதும் மல்லிகையை சந்தா செலுத்தி தருவித்து படித்தார். அப்பொழுது மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1976 ஆம் ஆண்டு மல்லிகையின் முகப்பில் தேரோவின் படம் வெளியானது. நான் எழுதிய நேர்காணல் இந்த இதழில் பிரசுரமானது.

எங்கள் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் பங்கேற்ற , இலங்கை வானொலியில் நடந்த சங்கநாதம் நிகழ்ச்சியில் தேரோ அவர்கள் கலந்துகொண்டு இனிய தமிழில் சிறந்த பேட்டி ஒன்றை கொடுத்தார். பேட்டி கண்டவர்:- அன்று வானொலியில் குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து தயாரித்து வழங்கிய பிரபல வானொலி ஊடகக்கலைஞர் வி. என். மதியழகன். (இவர் தற்போது கனடாவில்)

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1975 இல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்தியபொழுது முதல் நாள் காலையில்; தொடக்கவுரையையும் தமிழில் நிகழ்த்தினார்.

பின்னர் தமது கொரஸ்ஸ கிராமத்திற்கு முற்போக்கு எழுத்தாளர்களை வரவழைத்து ஒரு சிறப்பான கருத்தரங்கையே ஊர்மக்களைக்கொண்டு நடத்தினார். தேசிய ஒருமைப்பாடு தொடர்பான குறிப்பிட்ட கருத்தரங்கு பற்றிய செய்தியை அன்று வீரகேசரிப்பத்திரிகை தலைப்புச்செய்தியாக வெளியிட்டதுடன் மறுநாள் அதுகுறித்து ஆசிரியத்தலையங்கமும் எழுதியது. தினகரன் வாரமஞ்சரி விரிவான செய்தியை வெளியிட்டது.

அக்காலப்பகுதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் இந்த கொரஸ கருத்தரங்கு பரபரப்பாகப்பேசப்பட்டதற்குக் காரணம், அதில் தேரோ அவர்கள் தமிழில் நிகழ்த்திய கருத்தாழம் நிரம்பிய உரைதான். அப்படி என்னதான் பேசிவிட்டார் என்று வாசகர்கள் கேட்கலாம். ;சினைகளுக்கு ஜனநாயகத்தீர்வு காணப்படல்வேண்டும். அப்பொழுதுதான் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.

ஒரு தமிழ்ப்பெண்ணை ஒரு சிங்கள ஆடவர் திருமணம் முடித்தால் அல்லது ஒரு சிங்களவரை தமிழ்ப்பெண் மணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் நான் அப்படிச்சொல்ல மாட்டேன். அவ்விதம் திருமணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறக்காது, பிள்ளைதான் பிறக்கும்.

அவரது நீண்ட உரை தமிழில்தான் நிகழ்த்தப்பட்டது.

கொழும்பிலிருந்து வருகை தந்த தமிழ் எழுத்தாளர்கள் திகைத்துப்போனார்கள். அந்தக்கருத்தரங்கில் எழுத்தாளர் சங்கச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, சோமகாந்தன், மு. பஷிர், மு. கனகராஜன், உரும்பராய் செல்வம், டொக்டர் வாமதேவன், சுப்பிரமணியன், பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் எம். கே. இராகுலன்(இவர் தற்போது இலங்கை அதிபரின் மொழிபெயர்ப்பாளர்) ஆகியோர் உரையாற்றினர். ரத்னவன்ஸ தேரோ, இக்கருத்தரங்கின் பின்னர், செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அதனை மொழிபெயர்க்க முன்னர் அவர் மொழிபெயர்க்க முயன்றது தமிழக எழுத்தாளர் உமாசந்திரனின் முழுநிலவு நாவல்

யார் இந்த உமாசந்திரன்?

கல்கி வெள்ளி விழா நாவல்போட்டிக்காக முள்ளும் மலரும் எழுதி முதல் பரிசைப்பெற்றுக்கொண்டவர். இந்த நாவல் இயக்குநர் மகேந்திரனின் கைவண்ணத்தில் ரஜினி காந்த்- ஷோபா நடித்து பெரும் வரவேற்பு பெற்றது.

உமாசந்திரனின் நாவல் மொழிபெயர்ப்பை திடீரென கைவிட்டு, செங்கை ஆழியானின் வாடைக்காற்றை அவர் எடுத்துக்கொண்டதற்கு சொன்ன காரணம், ஆழியான் இலங்கையில் இருக்கிறார். மொழிபெயர்ப்பில் ஏதும் ஐயப்பாடுகள் நேர்ந்தாலும் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் இந்தியாவிலிருக்கும் உமாசந்திரனை நான் எங்கே போய்த்தேடுவது?

வாடைக்காற்றை சிங்களத்தில் மொழிபெயர்க்கும்போதும் அவருக்கு சிக்கல்கள் தோன்றின.

அக்கதையில் காதலும் இருக்கிறது. சில காட்சிகளை கிரக்கம் ஏற்படுத்தும் விதமாகவும் செங்கை ஆழியான் சித்திரித்திருந்தார். வாடைக்காற்று திரைப்படமாக்கப்பட்டபொழுதும் அந்தக்காட்சிகiளை இயக்குநரால் தத்ரூபமாக காண்பிக்க முடியவில்லை.

ஒரு நாள் என்னிடம் தமக்குள்ள சிக்கலையும் சொன்னர், பூபதி, நான் ஒரு துறவி. இந்தக்காதல் காட்சிகளை எப்படி மொழிபெயர்ப்பது. பிறகு பெரிய விவகாரமாகி விடுமே.

உங்களால் முடிந்தவாறு செய்யுங்கள் என்றேன்.

அவர் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு என்ற சிறிய கவிதை நூலையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இனவாத வன்செயல்கள் தலைதூக்கின. தமிழர்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். அகதிகளாயினர். இலங்கையில் ஒருமைப்பாட்டை உருவாக்க தமிழ் இலக்கியவாதிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் கைகோர்த்து வந்த ரத்னவண்ஸ தேரோ மிகவும் மனம் கலங்கிய நாட்கள் அவை.

நீர்கொழும்பில் நாம் பாதுகாப்பாக இருக்கின்றோமா என்று தேடித்தேடி வந்ததுடன் மினுவாங்கொடை என்ற சிங்களப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் எழுத்தாளர்.

Recent posts

என்னோட சீட் .

சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும்....
Thamil Paarvai

கடல் அலை.

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய்...
Thamil Paarvai

கவசத்திற்குள் இரு ஆவி.

வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்! சர். காரெய்ன் மற்றும் சர். டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும்...
Thamil Paarvai

குருவி குஞ்சு.

கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது,காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து...
Thamil Paarvai

தமிழர்களின் விருந்தோம்பல்

விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு...
Thamil Paarvai

கொரோனா முதல் அரசியல் மோதல் வரை… உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய 2020ம் ஆண்டு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம்...
Thamil Paarvai

Leave a Comment