
விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று, இருப்பதைக் கொண்டு அன்புடன் மனதார செய்யும் உபசரிப்பு தான் விருந்தோம்பல்.
அன்றையக் காலத்தின் வழக்கம் :
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர், விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் படைத்து அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும், என்பது பொருள். தன் வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு தண்ணீர் தருவதை நம் தமிழர்கள் பழக்கமாக வைத்திருப்பர். இதற்கு காரணம் வந்திருப்பவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டு வந்திருக்கக் கூடும். களைப்பாக இருக்கக்கூடும் என்பதால்தான். இன்று நாம் அதைக்கூட செய்கிறோமா என சற்றே சிந்தித்து பார்க்க வேண்டியதாக உள்ளது.
இலக்கண நு}லான தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நு}ல்களான நற்றிணை, புறநானு}று, பத்துப்பாட்டு நு}லான சிறுபானாற்றுப்படை, காப்பிய நு}லான சிலப்பதிகாரம் ஆகிய நு}ல்களிளும் விருந்தோம்பலின் சிறப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றைய நடைமுறையில் இருப்பது :
இவ்வளவு சிறப்பு மிக்க விருந்தோம்பல் இன்றைய அவசர உலகில் எப்படி இருந்துக் கொண்டு வருகிறது? விருந்தினரை எதிர்பார்க்கும் காலம் போய், விருந்தாளிகளாக வருபவர்கள் யார் வீட்டிற்கு செல்கின்றோமோ அவர்களிடம் முன் கூட்டியே அறிவிக்கும் காலம் வந்துவிட்டது. மேலும் யாராவது விருந்தாளியாய் வீட்டுக்கு வந்து விடுவார்களோ என அச்சம் கொள்வதை நாம் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. அப்படி வீட்டிற்கு ஒருவர் வந்து விட்டாலும், அவர்களுக்கு ஒரு காஃபி போட்டு வைக்கக்கூட யோசிக்கும் சிலரை பார்க்கிறோம். அதிலும் நாசுக்காக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். நீங்க சாப்பிட்டு போங்கன்னு சொன்னா இருக்கவா போறீங்க சமைச்சு வச்சிட்டுல்ல வந்திருப்பீங்க, என்று சொல்வதை கேட்டதும், அங்கே அதற்கு மேல் இருக்க தோணுமா என்ன? இன்னும் சிலர் நாம் போனதிலிருந்து பேசிக் கொண்டே இருப்பர். சரி கிளம்புறேன் எனக் கூறிவிட்டு கிளம்பும்போது, இப்படி காஃபி கூட குடிக்காம போறீங்களே? என்று கூறுபவர்களையும் பார்க்கிறோம். வீட்டிற்கு ஒருவர் வரும் போது நாம் அன்போடு நம்மால் இயன்றதை பரிமாறும் போது அதன் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெரிய விஷேச விருந்துகளில் கூட கிடைக்காது.
பழங்காலம் உணவு விடுதிகள் இல்லாத காலம். வெளியூர்க்குச் செல்வோர் பலநாளுக்கு வேண்டிய உணவினைக் கொண்டு செல்ல இயலாது. அரசர்கள், செல்வர்கள், வணிகர்கள் போன்றோர் மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது தேர்களிலும், மற்ற ஊர்திகளிலும் உணவிற்குத் தேவையானப் பொருள்களைக் கொண்டு சென்றனர். மற்றவர்கள் உணவையோ, உணவுப் பொருள்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையிருந்தது. அதனால் உணவின்றி வருந்துவோருக்கு உணவளித்தல் இன்றியமையாத அறமாகப் போற்றப்பெற்றது. இக்காலத்தில் உணவு விடுதிகள் பெருகியுள்ளன. எப்பொருள் எங்கு வேண்டுமென்றாலும் பெறலாம். பல நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்படியான பல உணவு வகைகள் கிடைக்கின்றன. அதனால் இப்பொழுது விருந்தோம்பல் என்பது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயனை எதிர்பார்த்துச் செய்வதற்காவும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த விருந்தோம்பல் என்ற சிறப்பான விஷயத்தை உணர்ந்து, அதை அவ்வபோது நாம் பழக்கத்தில் கொண்டு செயல்படுத்தி, நம் சந்ததியினரும் அதை பழக்கத்தில் கொண்டு செயல்படுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.